13. அப்பொழுது, சிறு பிள்ளைகளை அவர் தொடும்படிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; கொண்டுவந்தவர்களைச் சீஷர்கள் அதட்டினார்கள்.
14. இயேசு அதைக் கண்டு, விசனமடைந்து: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது.
15. எவனாகிலும் சிறு பிள்ளையைப்போல் தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அவன் அதில் பிரவேசிப்பதில்லையென்று, மெய்யாகவே உஙகளுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி,
16. அவர்களை அணைத்துக்கொண்டு, அவர்கள்மேல் கைகளை வைத்து, அவர்களை ஆசீர்வதித்தார்.
17. பின்பு அவர் புறப்பட்டு வழியிலே போகையில், ஒருவன் ஓடிவந்து, அவருக்கு முன்பாக முழங்கால்படியிட்டு: நல்ல போதகரே, நித்தியஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான்.
18. அதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனுமில்லையே.
19. விபசாரஞ்செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, வஞ்சனை செய்யாதிருப்பாயாக, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்கிற கற்பனைகளை அறிந்திருக்கிறாயே என்றார்.
20. அதற்கு அவன்: போதகரே, இவைகளையெல்லாம் என் சிறுவயதுமுதல் கைக்கொண்டிருக்கிறேன் என்றான்.
21. இயேசு அவனைப் பார்த்து, அவனிடத்தில் அன்புகூர்ந்து: உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; நீ போய், உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்று, தரித்திரருக்குக் கொடு; அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றிவா என்றார்.
22. அவன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாயிருந்தபடியால், இந்த வார்த்தையைக் கேட்டு, மனமடிந்து, துக்கத்தோடே போய்விட்டான்.