மத்தேயு 25:18-29 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

18. ஒரு தாலந்தை வாங்கினவனோ, போய், நிலத்தைத் தோண்டி, தன் எஜமானுடைய பணத்தைப் புதைத்துவைத்தான்.

19. வெகுகாலமானபின்பு அந்த ஊழியக்காரருடைய எஜமான் திரும்பிவந்து, அவர்களிடத்தில் கணக்குக் கேட்டான்.

20. அப்பொழுது, ஐந்து தாலந்தை வாங்கினவன், வேறு ஐந்து தாலந்தைக் கொண்டுவந்து: ஆண்டவனே, ஐந்து தாலந்தை என்னிடத்தில் ஒப்புவித்தீரே; அவைகளைக்கொண்டு, இதோ, வேறு ஐந்து தாலந்தைச் சம்பாதித்தேன் என்றான்.

21. அவனுடைய எஜமான் அவனை நோக்கி: நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன், உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான்.

22. இரண்டு தாலந்தை வாங்கினவனும் வந்து: ஆண்டவனே, இரண்டு தாலந்தை என்னிடத்தில் ஒப்புவித்தீரே; அவைகளைக்கொண்டு, இதோ, வேறு இரண்டு தாலந்தைச் சம்பாதித்தேன் என்றான்.

23. அவனுடைய எஜமான் அவனை நோக்கி: நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன்; உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான்.

24. ஒரு தாலந்தை வாங்கினவன் வந்து: ஆண்டவனே, நீர் விதைக்காத இடத்தில் அறுக்கிறவரும், தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவருமான கடினமுள்ள மனுஷன் என்று அறிவேன்.

25. ஆகையால், நான் பயந்து போய், உமது தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன்; இதோ, உம்முடையதை வாங்கிக்கொள்ளும் என்றான்.

26. அவனுடைய எஜமான் பிரதியுத்தரமாக: பொல்லாதவனும் சோம்பலுமான ஊழியக்காரனே, நான் விதைக்காத இடத்தில் அறுக்கிறவனென்றும் தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவனென்றும் அறிந்திருந்தாயே.

27. அப்படியானால், நீ என் பணத்தைக் காசுக்காரர் வசத்தில் போட்டுவைக்க வேண்டியதாயிருந்தது; அப்பொழுது, நான் வந்து என்னுடையதை வட்டியோடே வாங்கிக்கொள்ளுவேனே, என்று சொல்லி,

28. அவனிடத்திலிருக்கிற தாலந்தை எடுத்து, பத்துத் தாலந்துள்ளவனுக்குக் கொடுங்கள்.

29. உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்; இல்லாதவனிடத்திலிருந்து உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்.

மத்தேயு 25