2. உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்துக்குப் போங்கள்; போனவுடனே, அங்கே ஒரு கழுதையையும் அதனோடே ஒரு குட்டியையும் கட்டியிருக்கக் காண்பீர்கள்; அவைகளை அவிழ்த்து என்னிடத்தில் கொண்டுவாருங்கள்.
3. ஒருவன் உங்களுக்கு ஏதாகிலும் சொன்னால்: இவைகள் ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லுங்கள்; உடனே அவைகளை அனுப்பிவிடுவான் என்று சொல்லி, அவர்களை அனுப்பினார்.
4. இதோ, உன் ராஜா சாந்தகுணமுள்ளவராய், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிக்கொண்டு, உன்னிடத்தில் வருகிறார் என்று சீயோன் குமாரத்திக்குச் சொல்லுங்கள் என்று,
5. தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது,
6. சீஷர்கள் போய், இயேசு தங்களுக்குக் கட்டளையிட்டபடியே செய்து,
7. கழுதையையும் குட்டியையும் கொண்டுவந்து, அவைகள்மேல் தங்கள் வஸ்திரங்களைப் போட்டு, அவரை ஏற்றினார்கள்.
8. திரளான ஜனங்கள் தங்கள் வஸ்திரங்களை வழியிலே விரித்தார்கள்; வேறு சிலர் மரக்கிளைகளைத் தறித்து வழியிலே பரப்பினார்கள்.
9. முன்நடப்பாரும் பின்நடப்பாருமாகிய திரளான ஜனங்கள்: தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர், உன்னதத்திலே ஓசன்னா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள்.
10. அவர் எருசலேமுக்குள் பிரவேசிக்கையில், நகரத்தார் யாவரும் ஆச்சரியப்பட்டு, இவர் யார்? என்று விசாரித்தார்கள்.
11. அதற்கு ஜனங்கள்: இவர் கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்த தீர்க்கதரிசியாகிய இயேசு என்றார்கள்.
12. இயேசு தேவாலயத்தில் பிரவேசித்து, ஆலயத்திலே விற்கிறவர்களும் கொள்ளுகிறவர்களுமாகிய யாவரையும் வெளியே துரத்தி, காசுக்காரருடைய பலகைகளையும் புறா விற்கிறவர்களின் ஆசனங்களையும் கவிழ்த்து:
13. என்னுடைய வீடு ஜெபவீடு என்னப்படும் என்று எழுதியிருக்கிறது; நீங்களோ அதைக் கள்ளர் குகையாக்கினீர்கள் என்றார்.
14. அப்பொழுது, குருடரும் சப்பாணிகளும் தேவாலயத்திலே அவரிடத்திற்கு வந்தார்கள், அவர்களைச் சொஸ்தமாக்கினார்.
15. அவர் செய்த அதிசயங்களையும், தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! என்று தேவாலயத்திலே ஆர்ப்பரிக்கிற பிள்ளைகளையும், பிராதன ஆசாரியரும் வேதபாரகரும் கண்டு, கோபமடைந்து,
16. அவரை நோக்கி: இவர்கள் சொல்லுகிறதைக் கேட்கிறீரோ என்றார்கள். அதற்கு இயேசு: ஆம், கேட்கிறேன். குழந்தைகளுடைய வாயினாலும் பாலகருடைய வாயினாலும் துதி உண்டாகும்படி செய்தீர் என்பதை நீங்கள் ஒருக்காலும் வாசிக்கவில்லையா என்றார்.
17. அவர்களை விட்டு நகரத்திலிருந்து புறப்பட்டு, பெத்தானியாவுக்குப் போய், அங்கே இராத்தங்கினார்.
18. காலையிலே அவர் நகரத்துக்குத் திரும்பிவருகையில், அவருக்குப் பசியுண்டாயிற்று.
19. அப்பொழுது வழியருகே ஒரு அத்திமரத்தைக் கண்டு, அதினிடத்திற் போய், அதிலே இலைகளையன்றி வேறொன்றையுங்காணாமல்: இனி ஒருக்காலும் உன்னிடத்தில் கனி உண்டாகாதிருக்கக்கடவது என்றார்; உடனே அத்திமரம் பட்டுப்போயிற்று.
20. சீஷர்கள் அதைக் கண்டு: இந்த அத்திமரம் எத்தனை சீக்கிரமாய்ப் பட்டுப்போயிற்று! என்று சொல்லி ஆச்சரியப்பட்டார்கள்.
21. இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் சந்தேகப்படாமல் விசுவாசமுள்ளவர்களாயிருந்தால், இந்த அத்திமரத்திற்குச் செய்ததை நீங்கள் செய்வதுமல்லாமல், இந்த மலையைப்பார்த்து: நீ பெயர்ந்து சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொன்னாலும் அப்படியாகும் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.