6. வெயில் ஏறினபோதோ, தீய்ந்துபோய், வேரில்லாமையால் உலர்ந்துபோயிற்று.
7. சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து அதை நெருக்கிப்போட்டது.
8. சில விதையோ நல்ல நிலத்தில் விழுந்து, சிலது நூறாகவும், சிலது அறுபதாகவும், சிலது முப்பதாகவும் பலன் தந்தது.
9. கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றார்.
10. அப்பொழுது, சீஷர்கள் அவரிடத்தில் வந்து: ஏன் அவர்களோடே உவமைகளாகப் பேசுகிறீர் என்று கேட்டார்கள்.
11. அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: பரலோகராஜ்யத்தின் இரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது, அவர்களுக்கோ அருளப்படவில்லை.
12. உள்ளவன் எவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்; இல்லாதவன் எவனோ அவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்.
13. அவர்கள் கண்டும் காணாதவர்களாயும், கேட்டும் கேளாதவர்களாயும், உணர்ந்துகொள்ளாதவர்களாயும் இருக்கிறபடியினால், நான் உவமைகளாக அவர்களோடே பேசுகிறேன்.
14. ஏசாயாவின் தீர்க்கதரிசனம் அவர்களிடத்தில் நிறைவேறுகிறது; அதாவது: காதாரக்கேட்டும் உணராதிருப்பீர்கள்; கண்ணாரக்கண்டும் அறியாதிருப்பீர்கள்.
15. இந்த ஜனங்கள் கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து மனந்திரும்பாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படியாக, அவர்கள் இருதயம் கொழுத்திருக்கிறது; காதால் மந்தமாய்க் கேட்டு, தங்கள் கண்களை மூடிக்கொண்டார்கள் என்பதே.
16. உங்கள் கண்கள் காண்கிறதினாலும், உங்கள் காதுகள் கேட்கிறதினாலும், அவைகள் பாக்கியமுள்ளவைகள்.
17. அநேக தீர்க்கதரிசிகளும் நீதிமான்களும் நீங்கள் காண்கிறவைகளைக் காணவும், நீங்கள் கேட்கிறவைகளைக் கேட்கவும் விரும்பியும், காணாமலும் கேளாமலும் போனார்களென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.