1. அப்பொழுது, அவர் தம்முடைய பன்னிரண்டு சீஷர்களையும் தம்மிடத்தில் வரவழைத்து, அசுத்த ஆவிகளைத் துரத்தவும், சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கவும் அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்.
2. அந்தப் பன்னிரண்டு அப்போஸ்தலருடைய நாமங்களாவன: முந்தினவன் பேதுரு என்னப்பட்ட சீமோன், அவன் சகோதரன் அந்திரேயா, செபெதேயுவின் குமாரன் யாக்கோபு, அவன் சகோதரன் யோவான்,
3. பிலிப்பு, பற்தொலொமேயு, தோமா, ஆயக்காரனாகிய மத்தேயு, அல்பேயுவின் குமாரன் யாக்கோபு, ததேயு என்னும் மறுநாமமுள்ள லெபேயு,
4. கானானியனாகிய சீமோன், அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து என்பவைகளே.
5. இந்தப் பன்னிருவரையும் இயேசு அனுப்புகையில், அவர்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது என்னவென்றால்: நீங்கள் புறஜாதியார் நாடுகளுக்குப் போகாமலும், சமாரியர் பட்டணங்களில் பிரவேசியாமலும்,
6. காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள்.
7. போகையில், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கியுங்கள்.