1. அலங்கம் கட்டிமுடிந்து, கதவுகள் போடப்பட்டு, வாசல் காவலாளரையும், பாடகரையும், லேவியரையும் ஏற்படுத்தினபின்பு,
2. நான் என் சகோதரனாகிய ஆனானியையும், அநேகரைப்பார்க்கிலும் உண்மையுள்ளவனும் தேவனுக்குப் பயந்தவனுமாயிருந்த அரமனைத்தலைவனாகிய அனனியாவையும், எருசலேமின் காவல் விசாரணைக்கு ஏற்படுத்தினேன்.
3. அவர்களை நோக்கி: வெயில் ஏறுமட்டும் எருசலேமின் வாசல்கள் திறக்கப்படவேண்டாம்; நீங்கள் நிற்கும்போதே கதவுகளைச் சாத்தித் தாழ்ப்பாள் போட்டு, எருசலேமின் குடிகளில் காவலாளர் அவரவர் தங்கள் காவலிலே, அவரவர் தங்கள் வீடுகளுக்கு எதிராக நிறுத்தப்படவேண்டும் என்றேன்.
4. பட்டணம் விஸ்தாரமும் பெரிதுமாயிருந்தது; அதற்குள்ளே ஜனங்கள் கொஞ்சமாயிருந்தார்கள், வீடுகளும் கட்டப்படவில்லை.
5. அப்பொழுது வம்ச அட்டவணைகளைப் பார்க்கிறதற்கு, நான் பிரபுக்களையும் அதிகாரிகளையும் ஜனங்களையும் கூடிவரச்செய்ய, என் தேவன் என் மனதிலே ஒரு எண்ணத்தை உண்டாக்கினார்; முந்தி வந்தவர்களின் வம்ச அட்டவணைப் புஸ்தகம் அப்பொழுது எனக்கு அகப்பட்டது; அதிலே எழுதியிருக்க நான் கண்டது என்னவென்றால்: