1. அலங்கம் கட்டிமுடிந்து, கதவுகள் போடப்பட்டு, வாசல் காவலாளரையும், பாடகரையும், லேவியரையும் ஏற்படுத்தினபின்பு,
2. நான் என் சகோதரனாகிய ஆனானியையும், அநேகரைப்பார்க்கிலும் உண்மையுள்ளவனும் தேவனுக்குப் பயந்தவனுமாயிருந்த அரமனைத்தலைவனாகிய அனனியாவையும், எருசலேமின் காவல் விசாரணைக்கு ஏற்படுத்தினேன்.
3. அவர்களை நோக்கி: வெயில் ஏறுமட்டும் எருசலேமின் வாசல்கள் திறக்கப்படவேண்டாம்; நீங்கள் நிற்கும்போதே கதவுகளைச் சாத்தித் தாழ்ப்பாள் போட்டு, எருசலேமின் குடிகளில் காவலாளர் அவரவர் தங்கள் காவலிலே, அவரவர் தங்கள் வீடுகளுக்கு எதிராக நிறுத்தப்படவேண்டும் என்றேன்.
4. பட்டணம் விஸ்தாரமும் பெரிதுமாயிருந்தது; அதற்குள்ளே ஜனங்கள் கொஞ்சமாயிருந்தார்கள், வீடுகளும் கட்டப்படவில்லை.
5. அப்பொழுது வம்ச அட்டவணைகளைப் பார்க்கிறதற்கு, நான் பிரபுக்களையும் அதிகாரிகளையும் ஜனங்களையும் கூடிவரச்செய்ய, என் தேவன் என் மனதிலே ஒரு எண்ணத்தை உண்டாக்கினார்; முந்தி வந்தவர்களின் வம்ச அட்டவணைப் புஸ்தகம் அப்பொழுது எனக்கு அகப்பட்டது; அதிலே எழுதியிருக்க நான் கண்டது என்னவென்றால்:
6. பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் சிறைபிடித்துப்போனவர்களும், சிறையிருப்பிலிருந்து செருபாபேலோடும், யெசுவா, நெகேமியா, அசரியா, ராமியா, நகமானி, மொர்தெகாய், பில்சான், மிஸ்பெரேத், பிக்வாயி, நெகூம், பானா என்பவர்களோடுங்கூட வந்து,
7. எருசலேமுக்கும் யூதாவுக்கும் திரும்பித் தங்கள் தங்கள் பட்டணங்களிலே குடியிறங்கினவர்களுமான இந்தத் தேசத்தின் புத்திரராகிய இஸ்ரவேல் ஜனங்களான மனிதரின் தொகையாவது:
8. பாரோஷின் புத்திரர் இரண்டாயிரத்து நூற்று எழுபத்திரண்டுபேர்.
9. செபத்தியாவின் புத்திரர் முந்நூற்று எழுபத்திரண்டுபேர்.
10. ஆராகின் புத்திரர் அறுநூற்று ஐம்பத்திரண்டுபேர்.