நெகேமியா 4:1-9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

1. நாங்கள் அலங்கத்தைக் கட்டுகிற செய்தியைச் சன்பல்லாத் கேட்டபோது, அவன் கோபித்து, எரிச்சலடைந்து, யூதரைச் சக்கந்தம்பண்ணி:

2. அந்த அற்பமான யூதர் செய்கிறது என்ன, அவர்களுக்கு இடங்கொடுக்கப்படுமோ, பலியிடுவார்களோ, ஒருநாளிலே முடித்துப்போடுவார்களோ, சுட்டெரித்துப் போடப்பட்டு மண்மேடுகளான கற்களுக்கு உயிர் கொடுப்பார்களோ, என்று தன் சகோதரருக்கும் சமாரியாவின் சேனைக்கும் முன்பாகச் சொன்னான்.

3. அப்பொழுது அம்மோனியனாகிய தொபியா அவன் பக்கத்தில் நின்று: அவர்கள் கட்டினாலும் என்ன, ஒரு நரி ஏறிப்போனால் அவர்களுடைய கல்மதில் இடிந்துபோகும் என்றான்.

4. எங்கள் தேவனே, நாங்கள் அவமதிக்கப்படுகிறதைக் கேட்டு, அவர்கள் நிந்திக்கிற நிந்தையை அவர்கள் தலையின்மேல் திருப்பி, அவர்களைச் சிறையிருப்பின் தேசத்திலே சூறைக்கு ஒப்புக்கொடும்.

5. அவர்கள் அக்கிரமத்தை மூடிப்போடாதேயும்; அவர்கள் பாவம் உமக்கு முன்பாகக் கொலைக்கப்படாதிருப்பதாக; கட்டுகிறவர்களுக்கு மனமடிவுண்டாகப் பேசினார்களே.

6. நாங்கள் அலங்கத்தைக் கட்டிவந்தோம்; அலங்கமெல்லாம் பாதிமட்டும் ஒன்றாய் இணைந்து உயர்ந்தது; ஜனங்கள் வேலைசெய்கிறதற்கு ஆவலாயிருந்தார்கள்.

7. எருசலேமின் அலங்கத்தைக் கட்டுகிற வேலை வளர்ந்தேறுகிறது என்றும், இடிக்கப்பட்ட இடங்கள் அடைபட்டு வருகிறது என்றும் சன்பல்லாத்தும், தொபியாவும், அரபியரும், அம்மோனியரும், அஸ்தோத்தியரும் கேட்டபோது, அவர்கள் மிகவும் எரிச்சலாகி,

8. எருசலேமின்மேல் யுத்தம்பண்ண எல்லாரும் ஏகமாய் வரவும், வேலையைத் தடுக்கவும் கட்டுப்பாடு பண்ணினார்கள்.

9. ஆனாலும் நாங்கள் எங்கள் தேவனை நோக்கி ஜெபம்பண்ணி, அவர்கள் நிமித்தம் இரவும்பகலும் ஜாமங்காக்கிறவர்களை வைத்தோம்.

நெகேமியா 4