நெகேமியா 13:16-23 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

16. மீனையும், சகலவித சரக்குகளையும் கொண்டுவந்து, ஓய்வுநாளிலே யூதா புத்திரருக்கும் எருசலேமில் இருக்கிறவர்களுக்கும் விற்கிற சில தீரியரும் உள்ளே குடியிருந்தார்கள்.

17. ஆகையால் நான் யூதாவின் பெரியவர்களைக் கடிந்துகொண்டு: நீங்கள் ஓய்வுநாளைப் பரிசுத்தக் குலைச்சலாக்குகிற இந்தப் பொல்லாத செய்கையென்ன?

18. உங்கள் பிதாக்கள் இப்படிச் செய்ததினாலல்லவா, நமது தேவன் நம்மேலும் இந்த நகரத்தின்மேலும் இந்தத் தீங்கையெல்லாம் வரப்பண்ணினார்; நீங்களோவென்றால் ஓய்வுநாளைப் பரிசுத்தக் குலைச்சலாக்குகிறதினால், இஸ்ரவேலின் மேலிருக்கிற உக்கிரத்தை அதிகரிக்கப்பண்ணுகிறீர்கள் என்று அவர்களுக்குச் சொன்னேன்.

19. ஆகையால் ஓய்வுநாளுக்கு முன்னே எருசலேமின் பட்டணவாசலில், மாலைமயங்கும்போது, கதவுகளைப் பூட்டவும், ஓய்வுநாள் முடியுமட்டும் அவைகளைத் திறவாதிருக்கவும் வேண்டுமென்று கட்டளையிட்டு, ஓய்வுநாளிலே ஒரு சுமையும் உள்ளே வராதபடிக்கு வாசலண்டையிலே என் வேலைக்காரரில் சிலரை நிறுத்தினேன்.

20. அதினால் வர்த்தகரும், சகலவித சரக்குகளை விற்கிறவர்களும், இரண்டொருதரம் எருசலேமுக்குப் புறம்பே இராத்தங்கினார்கள்.

21. அப்பொழுது நான் அவர்களைத் திடசாட்சியாய்க் கடிந்துகொண்டு, நீங்கள் அலங்கத்தண்டையிலே இராத்தங்குகிறது என்ன? நீங்கள் மறுபடியும் இப்படி செய்தால், உங்கள்மேல் கைபோடுவேன் என்று அவர்களோடே சொன்னேன்; அதுமுதல் அவர்கள் ஓய்வுநாளில் வராதிருந்தார்கள்.

22. ஓய்வுநாளைப் பரிசுத்தமாக்கும்படிக்கு, உங்களைச் சுத்தம்பண்ணிக்கொண்டு வாசல்களைக் காக்க வாருங்கள் என்று லேவியருக்கும் சொன்னேன். என் தேவனே, இதைக்குறித்து நீர் என்னை நினைத்தருளி, உம்முடைய மிகுந்த கிருபையின்படி எனக்கு இரங்குவீராக.

23. அஸ்தோத், அம்மோன், மோவாப் ஜாதிகளான ஸ்திரீகளைச் சேர்த்துக் கொண்ட சில யூதரையும் அந்த நாட்களில் கண்டேன்.

நெகேமியா 13