28. அப்படியே பாடகரின் புத்திரர் எருசலேமின் சுற்றுப்புறங்களான சமபூமியிலும், நெத்தோபாத்தியரின் கிராமங்களிலும்,
29. பெத்கில்காலிலும், கேபா, அஸ்மாவேத் ஊர்களின் நாட்டுப்புறங்களிலும் இருந்து வந்து கூடினார்கள்; பாடகர் எருசலேமைச் சுற்றிலும் தங்களுக்குக் கிராமங்களைக் கட்டியிருந்தார்கள்.
30. ஆசாரியரும் லேவியரும் தங்களைச் சுத்தம்பண்ணிக்கொண்டு, ஜனத்தையும் பட்டணவாசல்களையும் அலங்கத்தையும் சுத்தம்பண்ணினார்கள்.
31. அப்பொழுது நான் யூதாவின் பிரபுக்களை அலங்கத்தின்மேல் ஏறப்பண்ணி, துதிசெய்து நடந்துபோகும்படி இரண்டு பெரிய கூட்டத்தாரை நிறுத்தினேன்; அவர்களில் ஒரு கூட்டத்தார் அலங்கத்தின்மேல் வலதுபுறமாகக் குப்பைமேட்டு வாசலுக்குப் போனார்கள்.
32. அவர்கள் பிறகாலே ஒசாயாவும், யூதாவின் பிரபுக்களில் பாதிப்பேரும்,
33. அசரியா, எஸ்றா, மெசுல்லாம்,
34. யூதா, பென்யமீன், செமாயா, எரேமியா என்பவர்களும்,
35. பூரிகைகளைப் பிடிக்கிற ஆசாரியரின் புத்திரரில் ஆசாப்பின் குமாரன் சக்கூரின் மகனாகிய மிகாயாவுக்குக் குமாரனான மத்தனியாவின் மகன் செமாயாவுக்குப் பிறந்த யோனத்தானின் குமாரன் சகரியாவும்,
36. தேவனுடைய மனுஷனாகிய தாவீதின் கீதவாத்தியங்களை வாசிக்கிற அவன் சகோதரரான செமாயா, அசரெயேல், மிலாலாய், கிலாலாய், மகாய், நெதனெயேல், யூதா, அனானி என்பவர்களும் போனார்கள்; வேதபாரகனாகிய எஸ்றா இவர்களுக்கு முன்பாக நடந்தான்.