1. ஞானம் தன் வீட்டைக் கட்டி, தன் ஏழு தூண்களையும் சித்திரந்தீர்த்து,
2. தன் கொழுத்த ஜந்துக்களை அடித்து, திராட்சரசத்தை வார்த்துவைத்து, தன் போஜனபந்தியை ஆயத்தப்படுத்தி.
3. தன் பணிவிடைக்காரிகளை அனுப்பி, பட்டணத்தின் உயர்ந்த மேடைகளின்மேல் நின்று கூப்பிட்டு,
4. புத்தியீனனை நோக்கி: எவன் பேதையோ அவன் இவ்விடத்தில் வரக்கடவன்.
5. நீங்கள் வந்து என் அப்பத்தைப் புசித்து, நான் வார்த்த திராட்சரசத்தைப் பானம்பண்ணுங்கள்.
6. பேதமையை விட்டு விலகுங்கள், அப்பொழுது பிழைத்திருப்பீர்கள்; புத்தியின் வழியிலே நடவுங்கள் என்று விளம்புகிறது.
7. பரியாசக்காரனைக் கண்டிக்கிறவன் இலச்சையடைகிறான்; துன்மார்க்கனைக் கண்டிக்கிறவன் தன்னைக் கறைப்படுத்திக்கொள்ளுகிறான்.