நீதிமொழிகள் 7:1-15 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

1. என் மகனே, நீ என் வார்த்தைகளைக்காத்து, என் கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்து,

2. என் கட்டளைகளையும் என் போதகத்தையும் உன் கண்மணியைப்போல் காத்துக்கொள், அப்பொழுது பிழைப்பாய்.

3. அவைகளை உன் விரல்களில் கட்டி, அவைகளை உன் இருதயபலகையில் எழுதிக்கொள்.

4. இச்சகவார்த்தைகளைப் பேசும் அந்நியப் பெண்ணாகிய பரஸ்திரீக்கு உன்னை விலக்கிக் காப்பதற்காக,

5. ஞானத்தை நோக்கி, நீ என் சகோதரி என்றும், புத்தியைப்பார்த்து, நீ என் இனத்தாள் என்றும் சொல்வாயாக.

6. நான் என் வீட்டின் ஜன்னலருகே நின்று, பலகணி வழியாய்ப் பார்த்தபோது,

7. பேதையர்களாகிய வாலிபருக்குள்ளே ஒரு புத்தியீன வாலிபனைக்கண்டு அவனைக் கவனித்தேன்.

8. அவன் மாலைமயங்கும் அஸ்தமன நேரத்திலும், இரவின் இருண்ட அந்தகாரத்திலும்,

9. அவள் இருக்கும் சந்துக்கடுத்த தெருவில் சென்று, அவள் வீட்டுவழியாய் நடந்துபோனான்.

10. அப்பொழுது இதோ, வேசியின் ஆடையாபரணந்தரித்த தந்திரமனமுள்ள ஒரு ஸ்திரீ அவனுக்கு எதிர்ப்பட்டாள்.

11. அவள் வாயாடியும் அடங்காதவளுமானவள்; அவள் கால்கள் வீட்டிலே தரிக்கிறதில்லை.

12. சிலவேளை வெளியிலிருப்பாள், சிலவேளை வீதியிலிருப்பாள், சந்துகள்தோறும் பதிவிருப்பாள்.

13. அவள் அவனைப் பிடித்து முத்தஞ்செய்து, முகம் நாணாமல் அவனைப் பார்த்து:

14. சமாதான பலிகள் என்மேல் சுமந்திருந்தது, இன்றைக்குத்தான் என் பொருத்தனைகளை நிறைவேற்றினேன்.

15. ஆதலால், நான் உன்னைச் சந்திக்கப்புறப்பட்டு, உன் முகத்தை ஆவலோடு தேடினேன்; இப்பொழுது உன்னைக் கண்டுபிடித்தேன்.

நீதிமொழிகள் 7