3. கிருபையும் சத்தியமும் உன்னைவிட்டு விலகாதிருப்பதாக; நீ அவைகளை உன் கழுத்திலே பூண்டு, அவைகளை உன் இருதயமாகிய பலகையில் எழுதிக்கொள்.
4. அதினால் தேவனுடைய பார்வையிலும் மனுஷருடைய பார்வையிலும் தயையும் நற்புத்தியும் பெறுவாய்.
5. உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து,
6. உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.
7. நீ உன்னை ஞானியென்று எண்ணாதே; கர்த்தருக்குப் பயந்து, தீமையை விட்டு விலகு.
8. அது உன் நாபிக்கு ஆரோக்கியமும், உன் எலும்புகளுக்கு ஊனுமாகும்.
9. உன் பொருளாலும், உன் எல்லா விளைவின் முதற்பலனாலும் கர்த்தரைக் கனம்பண்ணு.
10. அப்பொழுது உன் களஞ்சியங்கள் பூரணமாய் நிரம்பும்; உன் ஆலைகளில் திராட்சரசம் புரண்டோடும்.
11. என் மகனே, நீ கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவர் கடிந்துகொள்ளும்போது சோர்ந்துபோகாதே.
12. தகப்பன் தான் நேசிக்கிற புத்திரனைச் சிட்சிக்கிறதுபோல, கர்த்தரும் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனைச் சிட்சிக்கிறார்.
13. ஞானத்தைக் கண்டடைகிற மனுஷனும், புத்தியைச் சம்பாதிக்கிற மனுஷனும் பாக்கியவான்கள்.