3. ஏழைகளை ஒடுக்குகிற தரித்திரன் ஆகாரம் விளையாதபடி வெள்ளமாய் அடித்துக்கொண்டுபோகிற மழையைப்போலிருக்கிறான்.
4. வேதப்பிரமாணத்தை விட்டு விலகுகிறவர்கள் துன்மார்க்கரைப் புகழுகிறார்கள்; வேத பிரமாணத்தைக் கைக்கொள்ளுகிறவர்களோ அவர்களோடே போராடுகிறார்கள்.
5. துஷ்டர் நியாயத்தை அறியார்கள்; கர்த்தரைத் தேடுகிறவர்களோ சகலத்தையும் அறிவார்கள்.
6. இருவழிகளில் நடக்கிற திரியாவரக்காரன் ஐசுவரியவானாயிருந்தாலும், நேர்மையாய் நடக்கிற தரித்திரன் அவனிலும் வாசி.
7. வேதப்பிரமாணத்தைக் கைக்கொள்ளுகிறவன் விவேகமுள்ள புத்திரன்; போஜனப்பிரியருக்குத் தோழனாயிருக்கிறவனோ தன் தகப்பனை அவமானப்படுத்துகிறான்.
8. அநியாய வட்டியினாலும் ஆதாயத்தினாலும் தன் ஆஸ்தியைப் பெருகப்பண்ணுகிறவன், தரித்திரர்பேரில் இரங்குகிறவனுக்காக அதைச் சேகரிக்கிறான்.
9. வேதத்தைக் கேளாதபடி தன் செவியை விலக்குகிறவனுடைய ஜெபமும் அருவருப்பானது.
10. உத்தமர்களை மோசப்படுத்தி, பொல்லாத வழியிலே நடத்துகிறவன் தான் வெட்டின குழியில் தானே விழுவான்; உத்தமர்களோ நன்மையைச் சுதந்தரிப்பார்கள்.
11. ஐசுவரியவான் தன் பார்வைக்கு ஞானவான்; புத்தியுள்ள தரித்திரனோ அவனைப் பரிசோதிக்கிறான்.
12. நீதிமான்கள் களிகூரும்போது மகா கொண்டாட்டம் உண்டாகும்; துன்மார்க்கர் எழும்பும்போதோ மனுஷர் மறைந்து கொள்ளுகிறார்கள்.
13. தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்.
14. எப்பொழுதும் பயந்திருக்கிறவன் பாக்கியவான்; தன் இருதயத்தைக் கடினப்படுத்துகிறவனோ தீங்கில் விழுவான்.
15. ஏழை ஜனங்களை ஆளும் துஷ்ட அதிகாரி கெர்ச்சிக்கும் சிங்கத்துக்கும் அலைந்து திரிகிற கரடிக்கும் ஒப்பாயிருக்கிறான்.
16. பிரபு புத்தியீனனாயிருந்தால் அவன் செய்யும் இடுக்கண் மிகுதி; பொருளாசையை வெறுக்கிறவன் தீர்க்காயுசைப் பெறுவான்.
17. இரத்தப்பழிக்காக ஒடுக்கப்பட்டவன் குழியில் ஒளிக்க ஓடிவந்தால், அவனை ஆதரிக்கவேண்டாம்.
18. உத்தமனாய் நடக்கிறவன் இரட்சிக்கப்படுவான்; மாறுபாடான இருவழியில் நடக்கிறவனோ அவற்றில் ஒன்றிலே விழுவான்.
19. தன் நிலத்தைப் பயிரிடுகிறவன் ஆகாரத்தால் திருப்தியாவான்; வீணரைப் பின்பற்றுகிறவனோ வறுமையால் நிறைந்திருப்பான்.