2. கிலெயாத்தின் மனைவியும் அவனுக்குக் குமாரர்களைப் பெற்றாள்; அவன் மனைவி பெற்ற குமாரர் பெரியவர்களானபின்பு, அவர்கள் யெப்தாவை நோக்கி: உனக்கு எங்கள் தகப்பன் வீட்டிலே சுதந்தரம் இல்லை; நீ அந்நிய ஸ்திரீயின் மகன் என்று சொல்லி அவனைத் துரத்தினார்கள்.
3. அப்பொழுது யெப்தா: தன் சகோதரரை விட்டு ஓடிப்போய், தோப் தேசத்திலே குடியிருந்தான்; வீணரான மனுஷர் யெப்தாவோடே கூடிக்கொண்டு, அவனோடேகூட யுத்தத்திற்குப் போவார்கள்.
4. சிலநாளைக்குப்பின்பு, அம்மோன் புத்திரர் இஸ்ரவேலின்மேல் யுத்தம்பண்ணினார்கள்.
5. அவர்கள் இஸ்ரவேலின்மேல் யுத்தம்பண்ணும்போது கீலேயாத்தின் மூப்பர் யெப்தாவைத் தோப் தேசத்திலிருந்து அழைத்துவரப்போய்,
6. யெப்தாவை நோக்கி: நீ வந்து, நாங்கள் அம்மோன் புத்திரரோடு யுத்தம்பண்ண எங்கள் சேனாபதியாயிருக்க வேண்டும் என்றார்கள்.
7. அதற்கு யெப்தா கீலேயாத்தின் மூப்பரைப் பார்த்து: நீங்கள் அல்லவா என்னைப் பகைத்து, என் தகப்பன் வீட்டிலிருந்து என்னைத் துரத்தினவர்கள்? இப்பொழுது உங்களுக்கு ஆபத்து நேரிட்டிருக்கிற சமயத்தில் நீங்கள் என்னிடத்தில் ஏன் வருகிறீர்கள் என்றான்.
8. அதற்குக் கீலேயாத்தின் மூப்பர் யெப்தாவை நோக்கி: நீ எங்களுடனேகூட வந்து, அம்மோன் புத்திரரோடு யுத்தம்பண்ணி, கீலேயாத்தின் குடிகளாகிய எங்கள் அனைவர்மேலும் தலைவனாயிருக்க வேண்டும்; இதற்காக இப்பொழுது உன்னிடத்தில் வந்தோம் என்றார்கள்.
9. அதற்கு யெப்தா: அம்மோன் புத்திரரோடே யுத்தம்பண்ண, நீங்கள் என்னைத் திரும்ப அழைத்துப்போனபின்பு, கர்த்தர் அவர்களை என் முன்னிலையாய் ஒப்புக்கொடுத்தால், என்னை உங்களுக்குத் தலைவனாய் வைப்பீர்களா என்று கீலேயாத்தின் மூப்பரைக் கேட்டான்.