1. ராஜ்யம் முழுவதையும் ஆளும்படிக்குத் தன் ராஜ்யத்தின்மேல் நூற்றிருபது தேசாதிபதிகளையும்,
2. ராஜாவுக்கு நஷ்டம் வராதபடிக்கு அந்த தேசாதிபதிகள் கணக்கு ஒப்புவிக்கிறதற்காக அவர்களுக்கு மேலாக மூன்று பிரதானிகளையும் ஏற்படுத்துவது தரியுவுக்கு நலமென்று கண்டது; இவர்களில் தானியேல் ஒருவனாயிருந்தான்.
3. இப்படியிருக்கையில் தானியேல் பிரதானிகளுக்கும் தேசாதிபதிகளுக்கும் மேற்பட்டவனாயிருந்தான்; தானியேலுக்குள் விசேஷித்த ஆவி இருந்தமையால் அவனை ராஜ்யம் முழுமைக்கும் அதிகாரியாக ஏற்படுத்த ராஜா நினைத்தான்.