தானியேல் 2:15-22 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

15. இந்தக் கட்டளை ராஜாவினால் இத்தனை அவசரமாய்ப் பிறந்ததற்குக் காரணம் என்ன என்று ராஜாவின் சேர்வைக்காரனாகிய ஆரியோகினிடத்தில் கேட்டான்; அப்பொழுது ஆரியோகு தானியேலுக்குக் காரியத்தை அறிவித்தான்.

16. தானியேல் ராஜாவினிடத்தில் போய், சொப்பனத்தின் அர்த்தத்தை ராஜாவுக்குக் காண்பிக்கும்படித் தனக்குத் தவணைகொடுக்க விண்ணப்பம்பண்ணினான்.

17. பின்பு தானியேல் தன் வீட்டுக்குப்போய், தானும் தன் தோழரும் பாபிலோனின் மற்ற ஞானிகளோடேகூட அழியாதபடிக்கு இந்த மறைபொருளைக்குறித்துப் பரலோகத்தின் தேவனை நோக்கி இரக்கம் கேட்கிறதற்காக,

18. அனனியா, மீஷாவேல், அசரியா என்னும் தன்னுடைய தோழருக்கு இந்தக் காரியத்தை அறிவித்தான்.

19. பின்பு இராக்காலத்தில் தரிசனத்திலே தானியேலுக்கு மறைபொருள் வெளிப்படுத்தப்பட்டது; அப்பொழுது தானியேல் பரலோகத்தின் தேவனை ஸ்தோத்திரித்தான்.

20. பின்பு தானியேல் சொன்னது: தேவனுடைய நாமத்துக்கு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் ஸ்தோத்திரமுண்டாவதாக; ஞானமும் வல்லமையும் அவருக்கே உரியது.

21. அவர் காலங்களையும் சமயங்களையும் மாற்றுகிறவர்; ராஜாக்களைத் தள்ளி, ராஜாக்களை ஏற்படுத்துகிறவர்; ஞானிகளுக்கு ஞானத்தையும், அறிவாளிகளுக்கு அறிவையும் கொடுக்கிறவர்.

22. அவரே ஆழமும் மறைபொருளுமானதை வெளிப்படுத்துகிறவர்; இருளில் இருக்கிறதை அவர் அறிவார்; வெளிச்சம் அவரிடத்தில் தங்கும்.

தானியேல் 2