சங்கீதம் 89:34-52 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

34. என் உடன்படிக்கையை மீறாமலும், என் உதடுகள் விளம்பினதை மாற்றாமலும் இருப்பேன்.

35. ஒருவிசை என் பரிசுத்தத்தின்பேரில் ஆணையிட்டேன், தாவீதுக்கு நான் பொய்சொல்லேன்.

36. அவன் சந்ததி என்றென்றைக்கும் இருக்கும்; அவன் சிங்காசனம் சூரியனைப்போல எனக்கு முன்பாக நிலைநிற்கும்.

37. சந்திரனைப்போல அது என்றென்றைக்கும் உறுதியாயும், ஆகாயமண்டலத்துச் சாட்சியைப்போல் உண்மையாயும் இருக்கும் என்று விளம்பினீர். (சேலா).

38. ஆனாலும் நீர் எங்களை வெறுத்துத் தள்ளிவிட்டீர்; நீர் அபிஷேகம்பண்ணுவித்தவன்மேல் உக்கிரமானீர்.

39. உமது அடியானுடன் நீர் பண்ணின உடன்படிக்கையை ஒழித்துவிட்டு, அவன் கிரீடத்தைத் தரையிலே தள்ளி அவமானப்படுத்தினீர்.

40. அவன் மதில்களையெல்லாம் தகர்த்துப்போட்டு, அவன் அரணான ஸ்தலங்களைப் பாழாக்கினீர்.

41. வழிநடக்கிற யாவரும் அவனைக் கொள்ளையிடுகிறார்கள்; தன் அயலாருக்கு நிந்தையானான்.

42. அவன் சத்துருக்களின் வலது கையை நீர் உயர்த்தி, அவன் விரோதிகள் யாவரும் சந்தோஷிக்கும்படி செய்தீர்.

43. அவன் பட்டயத்தின் கருக்கை மழுக்கிப்போட்டு, அவனை யுத்தத்தில் நிற்காதபடி செய்தீர்.

44. அவன் மகிமையை அற்றுப்போகப்பண்ணி, அவன் சிங்காசனத்தைத் தரையிலே தள்ளினீர்.

45. அவன் வாலிபநாட்களைக் குறுக்கி, அவனை வெட்கத்தால் மூடினீர். (சேலா).

46. எதுவரைக்கும், கர்த்தாவே! நீர் என்றைக்கும் மறைந்திருப்பீரோ? உமது கோபம் அக்கினியைப்போல எரியுமோ?

47. என் ஜீவன் எவ்வளவு நிலையற்றது என்பதை நினைத்தருளும்; மனுபுத்திரர் யாவரையும் வீணாகச் சிருஷ்டிக்கவேண்டியதென்ன?

48. மரணத்தைக் காணாமல் உயிரோடிருப்பவன் யார்? தன் ஆத்துமாவைப் பாதாள வல்லடிக்கு விலக்கிவிடுகிறவன் யார்? (சேலா).

49. ஆண்டவரே, நீர் தாவீதுக்கு உம்முடைய உண்மையைக்கொண்டு சத்தியம்பண்ணின உமது பூர்வ கிருபைகள் எங்கே?

50. ஆண்டவரே, உம்முடைய சத்துருக்கள் உம்முடைய ஊழியக்காரரையும், நீர் அபிஷேகம் பண்ணினவனின் காலடிகளையும் நிந்திக்கிறபடியினால்,

51. கர்த்தாவே, உமது அடியார் சுமக்கும் நிந்தையையும், வலுமையான ஜனங்களெல்லாராலும் நான் என் மடியில் சுமக்கும் என் நிந்தையையும் நினைத்தருளும்.

52. கர்த்தருக்கு என்றென்றைக்கும் ஸ்தோத்திரமுண்டாவதாக. ஆமென். ஆமென்.

சங்கீதம் 89