1. சுத்த இருதயமுள்ளவர்களாகிய இஸ்ரவேலருக்கு தேவன் நல்லவராகவே இருக்கிறார்.
2. ஆனாலும் என் கால்கள் தள்ளாடுதலுக்கும், என் அடிகள் சறுக்குதலுக்கும் சற்றே தப்பிற்று.
3. துன்மார்க்கரின் வாழ்வை நான் காண்கையில், வீம்புக்காரராகிய அவர்கள்மேல் பொறாமை கொண்டேன்.
4. மரணபரியந்தம் அவர்களுக்கு இடுக்கண்களில்லை; அவர்களுடைய பெலன் உறுதியாயிருக்கிறது.
5. நரர் படும் வருத்தத்தில் அகப்படார்கள்; மனுஷர் அடையும் உபாதியை அடையார்கள்.
6. ஆகையால் பெருமை சரப்பணியைப்போல் அவர்களைச் சுற்றிக்கொள்ளும், கொடுமை ஆடையைப்போல் அவர்களை மூடிக்கொள்ளும்.
7. அவர்கள் கண்கள் கொழுப்பினால் எடுப்பாய்ப் பார்க்கிறது; அவர்கள் இருதயம் விரும்புவதிலும் அதிகமாய் நடந்தேறுகிறது.
8. அவர்கள் சீர்கெட்டுப்போய், அகந்தையாய்க் கொடுமை பேசுகிறார்கள்; இறுமாப்பாய்ப் பேசுகிறார்கள்.
9. தங்கள் வாய் வானமட்டும் எட்டப்பேசுகிறார்கள்; அவர்கள் நாவு பூமியெங்கும் உலாவுகிறது.
10. ஆகையால் அவருடைய ஜனங்கள் இந்த வழியாகவே திரும்புகிறார்கள்; தண்ணீர்கள் அவர்களுக்குப் பரிபூரணமாய்ச் சுரந்துவரும்.