1. என் தேவனே, என் சத்துருக்களுக்கு என்னைத் தப்புவியும்; என்மேல் எழும்புகிறவர்களுக்கு என்னை விலக்கி உயர்ந்த அடைக்கலத்திலே வையும்.
2. அக்கிரமக்காரருக்கு என்னைத் தப்புவித்து, இரத்தப்பிரியரான மனுஷருக்கு என்னை விலக்கி இரட்சியும்.
3. இதோ, என் பிராணனுக்குப் பதிவிருக்கிறார்கள்; கர்த்தாவே, என்னிடத்தில் மீறுதலும் பாவமும் இல்லாதிருந்தும், பலவான்கள் எனக்கு விரோதமாய்க் கூட்டங்கூடுகிறார்கள்.
4. என்னிடத்தில் அக்கிரமம் இல்லாதிருந்தும், ஓடித்திரிந்து யுத்தத்துக்கு ஆயத்தமாகிறார்கள்; எனக்குத் துணைசெய்ய விழித்து என்னை நோக்கிப்பாரும்.
5. சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, இஸ்ரவேலின் தேவனே, நீர் சகல ஜாதிகளையும் விசாரிக்க விழித்தெழும்பும்; வஞ்சகமாய்த் துரோகஞ்செய்கிற ஒருவருக்கும் தயை செய்யாதேயும். (சேலா).
6. அவர்கள் சாயங்காலத்தில் திரும்பிவந்து, நாய்களைப்போல ஊளையிட்டு, ஊரைச்சுற்றித் திரிகிறார்கள்.
7. இதோ, தங்கள் வார்த்தைகளைக் கக்குகிறார்கள்; அவர்கள் உதடுகளில் பட்டயங்கள் இருக்கிறது, கேட்கிறவன் யார் என்கிறார்கள்.
8. ஆனாலும் கர்த்தாவே, நீர் அவர்களைப்பார்த்து நகைப்பீர்; புறஜாதிகள் யாவரையும் இகழுவீர்.
9. அவன் வல்லமையை நான் கண்டு, உமக்குக் காத்திருப்பேன்; தேவனே எனக்கு உயர்ந்த அடைக்கலம்.