1. தேவனே, என் ஜெபத்தைக் கேட்டருளும்; என் விண்ணப்பத்திற்கு மறைந்திராதேயும்.
2. எனக்குச் செவிகொடுத்து, உத்தரவு அருளிச்செய்யும்; சத்துருவினுடைய கூக்குரலினிமித்தமும், துன்மார்க்கர் செய்யும் இடுக்கத்தினிமித்தமும் என் தியானத்தில் முறையிடுகிறேன்.
3. அவர்கள் என்மேல் பழிசாட்டி, குரோதங்கொண்டு, என்னைப் பகைக்கிறார்கள்.
4. என் இருதயம் எனக்குள் வியாகுலப்படுகிறது; மரணத்திகில் என்மேல் விழுந்தது.
5. பயமும் நடுக்கமும் என்னைப் பிடித்தது; அருக்களிப்பு என்னை மூடிற்று.
6. அப்பொழுது நான்: ஆ, எனக்குப் புறாவைப்போல் சிறகுகள் இருந்தால், நான்பறந்துபோய் இளைப்பாறுவேன்.
7. நான் தூரத்தில் அலைந்து திரிந்து வனாந்தரத்தில் தங்கியிருப்பேன். (சேலா).
8. பெருங்காற்றுக்கும் புசலுக்கும் தப்பத் தீவிரித்துக்கொள்ளுவேன் என்றேன்.
9. ஆண்டவரே, அவர்களை அழித்து, அவர்கள் பாஷையைப் பிரிந்துபோகப்பண்ணும்; கொடுமையையும் சண்டையையும் நகரத்திலே கண்டேன்;
10. அவைகள் இரவும்பகலும் அதின் மதில்கள்மேல் சுற்றித்திரிகிறது; அக்கிரமமும் வாதையும் அதின் நடுவில் இருக்கிறது;
11. கேடுபாடுகள் அதின் நடுவில் இருக்கிறது; கொடுமையும் கபடும் அதின் வீதியைவிட்டு விலகிப்போகிறதில்லை.
12. என்னை நிந்தித்தவன் சத்துரு அல்ல, அப்படியிருந்தால் சகிப்பேன்; எனக்கு விரோதமாய்ப் பெருமை பாராட்டினவன் என் பகைஞன் அல்ல, அப்படியிருந்தால் அவனுக்கு மறைந்திருப்பேன்.
13. எனக்குச் சமமான மனுஷனும், என் வழிகாட்டியும், என் தோழனுமாகிய நீயே அவன்.
14. நாம் ஒருமித்து, இன்பமான ஆலோசனைபண்ணி, கூட்டத்தோடே தேவாலயத்துக்குப் போனோம்.