சங்கீதம் 45:9-17 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

9. உமது நாயகிகளுக்குள்ளே அரசரின் குமாரத்திகளுண்டு, ராஜஸ்திரீ ஓப்பீரின் தங்கம் அணிந்தவளாய் உமது வலதுபாரிசத்தில் நிற்கிறாள்.

10. குமாரத்தியே கேள், நீ உன் செவியைச் சாய்த்து சிந்தித்துக்கொள்; உன் ஜனத்தையும் உன் தகப்பன் வீட்டையும் மறந்துவிடு.

11. அப்பொழுது ராஜா உன் அழகில் பிரியப்படுவார்; அவர் உன் ஆண்டவர், ஆகையால் அவரைப் பணிந்துகொள்.

12. தீரு குமாரத்தி காணிக்கை கொண்டுவருவாள்; ஜனங்களில் ஜசுவரியவான்களும் உன் தயவை நாடி வணங்குவார்கள்.

13. ராஜகுமாரத்தி உள்ளாகப் பூரண மகிமையுள்ளவள்; அவள் உடை பொற்சரிகையாயிருக்கிறது.

14. சித்திரத்தையலாடை தரித்தவளாய், ராஜாவினிடத்தில் அழைத்துக்கொண்டு வரப்படுவாள்; அவள் பின்னாலே செல்லும் அவளுடைய தோழிகளாகிய கன்னிகைகள் உம்மிடத்தில் கூட்டிக்கொண்டு வரப்படுவார்கள்.

15. அவர்கள் மகிழ்ச்சியோடும் களிப்போடும் வந்து, ராஜ அரமனைக்குள் பிரவேசிப்பார்கள்.

16. உமது பிதாக்களுக்குப் பதிலாக உமது குமாரர் இருப்பார்கள்; அவர்களைப் பூமியெங்கும் பிரபுக்களாக வைப்பீர்.

17. உமது நாமத்தை எல்லாத் தலைமுறைகளிலும் பிரஸ்தாபப்படுத்துவேன்; இதினிமித்தம் ஜனங்கள் உம்மை என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் துதிப்பார்கள்.

சங்கீதம் 45