1. அந்நாளிலே பாவத்தையும் அழுக்கையும் நீக்க, தாவீதின் குடும்பத்தாருக்கும் எருசலேமின் குடிகளுக்கும் திறக்கப்பட்ட ஒரு ஊற்று உண்டாயிருக்கும்.
2. அந்நாளிலே நான் விக்கிரகங்களின்பேரும் தேசத்தில் இராதபடிக்கு அழிப்பேன்; அவைகள் இனி நினைக்கப்படுவதில்லை; தரிசனம் சொல்லுகிறவர்களையும், அசுத்த ஆவியையும் தேசத்திலிருந்து போய்விடவும்பண்ணுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
3. இனி ஒருவன் தரிசனம் சொன்னால், அவனைப்பெற்ற அவன் தகப்பனும் அவன் தாயும் அவனை நோக்கி: நீ கர்த்தருடைய நாமத்தைக்கொண்டு பொய்பேசுகிறபடியால் நீ உயிரோடிருக்கப்படாது என்று சொல்லி, அவனைப்பெற்ற அவன் தகப்பனும் அவன் தாயும் அவன் தரிசனம் சொல்லும்போது அவனைக் குத்திப்போடுவார்கள்.
4. அந்நாளிலே தரிசனம் சொல்லுகிற அவனவன் தான் சொன்ன தரிசனத்தினால் வெட்கப்பட்டு, பொய் சொல்லும்படிக்கு இனி மயிர்ப்போர்வையைப் போர்த்துக்கொள்ளாமல்,
5. நான் தரிசனம் சொல்லுகிறவன் அல்ல, நான் நிலத்தைப் பயிரிடுகிறவன்; என் சிறுவயதுமுதல் ஒருவன் என்னை வேலைகொண்டான் என்பான்.
6. அப்பொழுது ஒருவன் அவனை நோக்கி: உன் கைகளில் இருக்கிற இந்த வடுக்கள் ஏதென்று கேட்டால், என் சிநேகிதரின் வீட்டிலே காயப்பட்டதினால் உண்டானவைகள் என்பான்.