8. தனக்கு நான் தானியத்தையும் திராட்சரசத்தையும் எண்ணெயையும் கொடுத்தவரென்றும், தனக்கு நான் வெள்ளியையும் பொன்னையும் பெருகப்பண்ணினவரென்றும் அவள் அறியாமற்போனாள்; அவைகளை அவர்கள் பாகாலுடையதாக்கினார்கள்.
9. ஆதலால் நான் என் தானியத்தை அதின் காலத்திலும், என் திராட்சரசத்தை அதின் காலத்திலும் திரும்ப எடுத்துக்கொண்டு, அவளுடைய நிர்வாணத்தை மூடுகிறதற்கு நான் கொடுத்திருந்த ஆட்டுமயிரையும் சணலையும் திரும்பப் பிடுங்கிக்கொள்ளுவேன்.
10. இப்போதும் அவளுடைய நேசர்களின் கண்களுக்கு முன்பாக அவளுடைய அவலட்சணத்தை வெளிப்படுத்துவேன்; ஒருவரும் அவளை என் கைக்கு நீங்கலாக்கி விடுவிப்பதில்லை.
11. அவளுடைய எல்லா மகிழ்ச்சியையும், அவளுடைய பண்டிகைகளையும், அவளுடைய மாதப்பிறப்புகளையும், அவளுடைய ஓய்வுநாட்களையும், சபைகூடுகிற அவளுடைய எல்லா ஆசரிப்புகளையும் ஒழியப்பண்ணுவேன்.
12. என் நேசர்கள் எனக்குக் கொடுத்த பணையம் என்று அவள் சொன்ன அவளுடைய திராட்சச்செடிகளையும், அவளுடைய அத்திமரங்களையும் நான் பாழாக்கி, அவைகளைக் காடாய்ப்போகப்பண்ணுவேன்; காட்டுமிருகங்கள் அவைகளைத் தின்னும்.
13. அவள் பாகால்களுக்குத் தூபங்காட்டி, தன் நெற்றிப்பட்டங்களினாலும் தன் ஆபரணங்களினாலும் தன்னைச் சிங்காரித்துக்கொண்டு, தன் நேசரைப் பின்தொடர்ந்து, என்னை மறந்துபோன நாட்களினிமித்தம் அவளை விசாரிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
14. ஆயினும், இதோ, நான் அவளுக்கு நயங்காட்டி, அவளை வனாந்தரத்திலே அழைத்துக்கொண்டுபோய், அவளோடே பட்சமாய்ப் பேசி,
15. அவ்விடத்திலிருந்து அவளுக்கு அவளுடைய திராட்சத்தோட்டங்களையும், நம்பிக்கையின் வாசலாக ஆகோரின் பள்ளத்தாக்கையும் கொடுப்பேன்; அப்பொழுது அவள் அங்கே, தன் இளவயதின் நாட்களிலும் தான் எகிப்துதேசத்திலிருந்து வந்த நாளிலும் பாடினதுபோல் பாடுவாள்.
16. அக்காலத்தில் நீ என்னை இனி பாகாலி என்று சொல்லாமல், ஈஷி என்று சொல்லுவாய் என்று கர்த்தர் உரைக்கிறார்.
17. பாகால்களுடைய நாமங்களை அவள் வாயிலிருந்து அற்றுப்போகப்பண்ணுவேன்; இனி அவைகளின் பேரைச் சொல்லி, அவைகளை நினைக்கிற நினைப்பும் இல்லாமற்போகும்.
18. அக்காலத்தில் நான் அவர்களுக்காகக் காட்டு மிருகங்களோடும், ஆகாயத்துப் பறவைகளோடும், பூமியிலே ஊரும் பிராணிகளோடும், ஒரு உடன்படிக்கைபண்ணி, வில்லையும் பட்டயத்தையும் யுத்தத்தையும் தேசத்திலே இராதபடிக்கு முறித்து, அவர்களைச் சுகமாய்ப் படுத்துக்கொண்டிருக்கப்பண்ணுவேன்.