1. இஸ்ரவேல் இளைஞனாயிருந்தபோது நான் அவனை நேசித்தேன்; எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன்.
2. அவர்கள் தங்களை அழைக்கிறவர்களின் முகத்துக்கு விலகிப்போய்விட்டார்கள்; பாகால்களுக்குப் பலியிட்டு, விக்கிரகங்களுக்குத் தூபங்காட்டினார்கள்.
3. நான் எப்பிராயீமைக் கைபிடித்து நடக்கப் பழக்கினேன்; ஆனாலும் நான் தங்களைக் குணமாக்குகிறவரென்று அறியாமற்போனார்கள்.
4. மனுஷரைக் கட்டி இழுக்கிற அன்பின் கயிறுகளால் நான் அவர்களை இழுத்தேன், அவர்கள் கழுத்துகளின்மேல் இருந்த நுகத்தடியை எடுத்துப் போடுகிறவரைப்போல் இருந்து, அவர்கள் பட்சம் சாய்ந்து, அவர்களுக்கு ஆகாரங்கொடுத்தேன்.
5. மனந்திரும்பமாட்டோமென்றதினால் அவர்கள் எகிப்து தேசத்துக்குத் திரும்பிப்போவதில்லை; அசீரியன் அவர்களுக்கு ராஜா.
6. ஆகையால் அவர்களுடைய ஆலோசனைகளினிமித்தம் பட்டயம் அவர்கள் பட்டணங்களுக்குள் பாய்ந்து, அவர்கள் தாழ்ப்பாள்களை நிர்மூலம்பண்ணி, அவர்களைப் பட்சிக்கும்.
7. என் ஜனங்கள் என்னைவிட்டு விலகுகிற மாறுபாட்டைப் பற்றிக்கொண்டிருக்கிறார்கள்; அவர்களை உன்னதமானவரிடத்தில் வரவழைத்தாலும் ஒருவனும் எழும்புகிறதில்லை.
8. எப்பிராயீமே, நான் உன்னை எப்படிக் கைவிடுவேன்? இஸ்ரவேலே, நான் உன்னை எப்படி ஒப்புக்கொடுப்பேன்? நான் உன்னை எப்படி அத்மாவைப்போலாக்குவேன்? உன்னை எப்படி செபோயீமைப்போல வைப்பேன்? என் இருதயம் எனக்குள் குழம்புகிறது; என் பரிதாபங்கள் ஏகமாய்ப் பொங்குகிறது.