1. நீதிமான் மடிந்து போகிறான், ஒருவரும் அதை மனதில் வைக்கிறதில்லை; புத்திமான்கள் எடுத்துக்கொள்ளப்படுகிறார்கள், ஆனாலும் தீங்குவராததற்குமுன்னே நீதிமான் எடுத்துக்கொள்ளப்படுகிறான் என்பதைச் சிந்திப்பார் இல்லை.
2. நேர்மையாய் நடந்தவர்கள் சமாதானத்துக்குள் பிரவேசித்து, தங்கள் படுக்கைகளில் இளைப்பாறுகிறார்கள்.
3. நாள் பார்க்கிறவளின் பிள்ளைகளே, விபசாரனுக்கும் வேசிக்கும் பிறந்த சந்ததியாரே, நீங்கள் இங்கே கிட்டிவாருங்கள்.
4. நீங்கள் யாரைப் பரியாசம்பண்ணுகிறீர்கள்? யாருக்கு விரோதமாய் வாயைத் திறந்து, நாக்கை நீட்டுகிறீர்கள்? நீங்கள் துரோகம்பண்ணுகிற பிள்ளைகளும், கள்ளச் சந்ததியாருமல்லவோ?
5. நீங்கள் பச்சையான சகல மரத்தின்கீழும், விக்கிரக தேவர்களோடே மோகாக்கினியில் வெந்து, பள்ளத்தாக்குகளிலே கன்மலை வெடிப்புகளின் கீழ்ப் பிள்ளைகளைக் கொன்றுபோடுகிறவர்கள்.
6. பள்ளத்தாக்குகளிலுள்ள வழவழப்பான சிலைகளிடத்தில் உன் பங்கு இருக்கிறது; அவைகள், அவைகளே உன் வீதம்; அவைகளுக்கு நீ பானபலியை வார்த்து, போஜனபலியையும் செலுத்துகிறாய்; இவைகளின்மேல் பிரியப்படுவேனோ?
7. நீ உயரமும் உன்னதமுமான மலைகளின்மேல் உன் மஞ்சத்தை வைக்கிறாய்; அங்கேயும் பலியிடும்படி ஏறுகிறாய்.