10. இப்பொழுதும் கர்த்தருடைய கட்டளையில்லாமல் இந்தத் தேசத்தை அழிக்க வந்தேனோ? இந்தத் தேசத்துக்கு விரோதமாய்ப் போய் அதை அழித்துப்போடு என்று கர்த்தர் என்னோடே சொன்னாரே என்று சொன்னான்.
11. அப்பொழுது எலியாக்கீமும் செப்னாவும் யோவாக்கும், ரப்சாக்கேயைப் பார்த்து: உம்முடைய அடியாரோடே சீரியபாஷையிலே பேசும், அது எங்களுக்குத் தெரியும்; அலங்கத்திலிருக்கிற ஜனத்தின் செவிகள் கேட்க எங்களோடே யூதபாஷையிலே பேசவேண்டாம் என்றார்கள்.
12. அதற்கு ரப்சாக்கே: உங்களோடுங்கூடத் தங்கள் மலத்தைத் தின்னவும், தங்கள் நீரைக் குடிக்கவும், அலங்கத்திலே தங்கியிருக்கிற புருஷரண்டைக்கே அல்லாமல், உன் ஆண்டவனண்டைக்கும், உன்னண்டைக்குமா, என் ஆண்டவன் இந்த வார்த்தைகளைப் பேச என்னை அனுப்பினார் என்று சொல்லி;
13. ரப்சாக்கே நின்றுகொண்டு, யூதபாஷையிலே உரத்தசத்தமாய்: அசீரியா ராஜாவாகிய மகாராஜாவுடைய வார்த்தைகளைக் கேளுங்கள்.
14. எசேக்கியா உங்களை வஞ்சியாதபடி பாருங்கள்; அவன் உங்களைத் தப்புவிக்கமாட்டான்.
15. கர்த்தர் நம்மை நிச்சயமாய்த் தப்புவிப்பார், இந்த நகரம் அசீரியா ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவதில்லை என்று சொல்லி, எசேக்கியா உங்களைக் கர்த்தரை நம்பப்பண்ணுவான்; அதற்கு இடங்கொடாதிருங்கள் என்று ராஜா சொல்லுகிறார்.
16. எசேக்கியாவின் சொல்லைக் கேளாதிருங்கள். அசீரியா ராஜா சொல்லுகிறதாவது: நீங்கள் என்னோடே இராசியாகி, காணிக்கையோடே என்னிடத்தில் வாருங்கள்.
17. நான் வந்து, உங்களைத் தானியமும் திராட்சத்தோட்டமுமுள்ள தேசமும், அப்பமும் திராட்சரசமுமுள்ள தேசமுமாகிய உங்கள் தேசத்துக்கு ஒப்பான தேசத்துக்கு அழைத்துக்கொண்டு போகுமளவும், அவனவன் தன்தன் திராட்சச்செடியின் கனியையும், தன்தன் அத்திமரத்தின் கனியையும் புசித்து, அவனவன் தன் தன் கிணற்றின் தண்ணீரைக் குடியுங்கள்.
18. கர்த்தர் நம்மைத் தப்புவிப்பார் என்று உங்களைப் போதனைசெய்ய எசேக்கியாவுக்குச் செவிகொடாதிருங்கள்; ஜாதிகளுடைய தேவர்களில் யாராவது தங்கள் தேசத்தை அசீரியா ராஜாவின் கைக்குத் தப்புவித்ததுண்டோ?