1. இதோ, சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் எருசலேமிலிருந்தும் யூதாவிலிருந்தும் சகலவிதமான ஆதரவுகளாகிய அப்பமென்கிற எல்லா ஆதரவையும், தண்ணீரென்கிற எல்லா ஆதரவையும்;
2. பராக்கிரமசாலியையும், யுத்தவீரனையும், நியாயாதிபதியையும், தீர்க்கதரிசியையும், சாஸ்திரியையும், மூப்பனையும்;
3. ஐம்பதுபேருக்கு அதிபதியையும், கனம்பொருந்தினவனையும் ஆலோசனைக்காரனையும், தொழில்களில் சாமர்த்தியமுள்ளவனையும், சாதுரியனையும் விலக்குவார்.
4. வாலிபரை அவர்களுக்கு அதிபதிகளாகத் தருவேன் என்கிறார்; பிள்ளைகள் அவர்களை ஆளுவார்கள்.
5. ஜனங்கள் ஒடுக்கப்படுவார்கள்; ஒருவருக்கொருவரும், அயலானுக்கு அயலானும் விரோதமாயிருப்பார்கள்; வாலிபன் முதிர்வயதுள்ளவனுக்கும், கீழ்மகன் மேன்மகனுக்கும் இடும்பு செய்வான்.
6. அப்பொழுது ஒருவன் தன் தகப்பன் வீட்டானாகிய தன் சகோதரனைப்பிடித்து: உனக்கு வஸ்திரம் இருக்கிறது, நீ எங்களுக்கு அதிபதியாயிரு; கேட்டுக்கு இனமான இந்தக் காரியம் உன் கையின் கீழாவதாக என்று சொல்ல:
7. அவன் அந்நாளிலே தன் கையை உயர்த்தி: நான் சீர்ப்படுத்துகிறவனாயிருக்கமாட்டேன்; என் வீட்டிலே அப்பமுமில்லை வஸ்திரமுமில்லை; என்னை ஜனங்களுக்கு அதிபதியாக வைக்கவேண்டாம் என்பான்.
8. ஏனென்றால் எருசலேம் பாழாக்கப்பட்டது, யூதா விழுந்துபோயிற்று; அவர்கள் நாவும், அவர்கள் கிரியைகளும், கர்த்தருடைய மகிமையின் கண்களுக்கு எரிச்சல் உண்டாக்கத்தக்கதாக அவருக்கு விரோதமாயிருக்கிறது.
9. அவர்கள் முகப்பார்வை அவர்களுக்கு விரோதமாய்ச் சாட்சியிடும்; அவர்கள் தங்கள் பாவத்தை மறைக்காமல், சோதோம் ஊராரைப்போல வெளிப்படுத்துகிறார்கள்; அவர்கள் ஆத்துமாவுக்கு ஐயோ! தங்களுக்கே தீமையை வருவித்துக்கொள்ளுகிறார்கள்.
10. உங்களுக்கு நன்மையுண்டாகும் என்று நீதிமான்களுக்குச் சொல்லுங்கள்; அவர்கள் தங்கள் கிரியைகளின் பலனை அனுபவிப்பார்கள்.
11. துன்மார்க்கனுக்கு ஐயோ! அவனுக்குக் கேடு உண்டாகும்; அவன் கைகளின் பலன் அவனுக்குக் கிடைக்கும்.
12. பிள்ளைகள் என் ஜனங்களை ஒடுக்குகிறவர்களாயிருக்கிறார்கள்; ஸ்திரீகள் அவர்களை ஆளுகிறார்கள். என் ஜனமே, உன்னை நடத்துகிறவர்கள் உன்னை மோசம்போக்கி, நீ நடக்கவேண்டிய வழியை அழித்துப்போடுகிறார்கள்.
13. கர்த்தர் வழக்காட எழுந்திருந்து, ஜனங்களை நியாயந்தீர்க்க நிற்கிறார்.
14. கர்த்தர் தமது ஜனத்தின் மூப்பரையும், அதின் பிரபுக்களையும் நியாயம் விசாரிப்பார். நீங்களே இந்தத் திராட்சத்தோட்டத்தைப் பட்சித்துப்போட்டீர்கள்; சிறுமையானவனிடத்தில் கொள்ளையிட்ட பொருள் உங்கள் வீடுகளில் இருக்கிறது.