1. ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா யூதாவையும் எருசலேமையும் குறித்துக் கண்ட தரிசனம்.
2. கடைசிநாட்களில் கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்படும்; எல்லா ஜாதிகளும் அதற்கு ஓடிவருவார்கள்.
3. திரளான ஜனங்கள் புறப்பட்டு வந்து: நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார்; நாம் அவர் பாதைகளில் நடப்போம் என்பார்கள்; ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து கர்த்தரின் வசனமும் வெளிப்படும்.
4. அவர் ஜாதிகளுக்குள் நியாயந்தீர்த்து, திரளான ஜனங்களைக் கடிந்து கொள்வார்; அப்பொழுது அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஜாதிக்கு விரோதமாய் ஜாதி பட்டயம் எடுப்பதில்லை, இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை.
5. யாக்கோபின் வம்சத்தாரே, கர்த்தரின் வெளிச்சத்திலே நடப்போம் வாருங்கள்.
6. யாக்கோபின் வம்சத்தாராகிய உம்முடைய ஜனத்தைக் கைநெகிழ்ந்தீர்; அவர்கள் கீழ்த்திசையாரின் போதகத்தால் நிறைந்து, பெலிஸ்தரைப்போல் நாள்பார்க்கிறவர்களாயிருந்து, அந்நிய புத்திரர்மேல் பிரியப்படுகிறார்களே.
7. அவர்கள் தேசம் வெள்ளியினாலும் பொன்னினாலும் நிறைந்திருக்கிறது; அவர்கள் பொக்கிஷங்களுக்கு முடிவில்லை; அவர்கள் தேசம் குதிரைகளாலும் நிறைந்திருக்கிறது; அவர்கள் இரதங்களுக்கும் முடிவில்லை.
8. அவர்கள் தேசம் விக்கிரகங்களாலும் நிறைந்திருக்கிறது; தங்கள் கைகளின் கிரியையையும், தங்கள் விரல்கள் உண்டுபண்ணினதையும் பணிந்துகொள்ளுகிறார்கள்.