13. நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்கு மேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் என்றும்,
14. நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன்; உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே.
15. ஆனாலும் நீ அகாதமான பாதாளத்திலே தள்ளுண்டுபோனாய்.
16. உன்னைக் காண்கிறவர்கள் உன்னை உற்றுப்பார்த்து, உன்னைக்குறித்துச் சிந்தித்து; இவன்தானா பூமியைத் தத்தளிக்கவும், ராஜ்யங்களை அதிரவும் செய்து,
17. உலகத்தை வனாந்தரமாக்கி, அதின் நகரங்களை அழித்து, சிறைப்பட்டவர்களைத் தங்கள் வீடுகளுக்குப் போகவிடாமலிருந்தவன் என்பார்கள்.
18. ஜாதிகளுடைய சகல ராஜாக்களும், அவரவர் தங்கள் அறையிலே மகிமையோடே கிடத்தப்பட்டிருக்கிறார்கள்.
19. நீயோ அழுகிப்போன கிளையைப்போலவும், பட்டயக்குத்தால் கொலையுண்டவர்களின் உடுப்பைப்போலவும், ஒரு குழியின் கற்களுக்குள்ளே கிடக்கிறவர்களைப்போலவும், காலால் மிதிக்கப்பட்ட பிணத்தைப்போலவும், உன் கல்லறைக்குப் புறம்பாய் எறிந்துவிடப்பட்டாய்.