1. இந்த நடபடிகளுக்குப்பின்பு, ராஜாவாகிய அகாஸ்வேரு அம்மெதாத்தாவின் குமாரனாகிய ஆமான் என்னும் ஆகாகியனை மேன்மைப்படுத்தி, தன்னிடத்திலிருக்கிற சகல பிரபுக்களுக்கும் மேலாக அவனுடைய ஆசனத்தை உயர்த்திவைத்தான்.
2. ஆகையால் ராஜாவின் அரமனை வாசலிலிருக்கிற ராஜாவின் ஊழியக்காரர் எல்லாரும் ஆமானை வணங்கி நமஸ்கரித்து வந்தார்கள்; அவனுக்கு இப்படிச் செய்யவேண்டும் என்று ராஜா கட்டளையிட்டிருந்தான்; ஆனாலும் மொர்தெகாய் அவனை வணங்கவுமில்லை, நமஸ்கரிக்கவுமில்லை.
3. அப்பொழுது ராஜாவின் அரமனை வாசலிலிருக்கிற ராஜாவின் ஊழியக்காரர் மொர்தெகாயைப் பார்த்து: நீ ராஜாவின் கட்டளையை மீறுகிறது என்ன என்று கேட்டார்கள்.
4. இப்படி அவர்கள் நாளுக்குநாள் அவனுடனே சொல்லியும், அவன் தங்களுக்குச் செவிகொடாதபோது, தான் யூதன் என்று அவன் அவர்களுக்கு அறிவித்திருந்தபடியால், மொர்தெகாயின் சொற்கள் நிலைநிற்குமோ என்று பார்க்கிறதற்கு, அதை ஆமானுக்கு அறிவித்தார்கள்.
5. ஆமான் மொர்தெகாய் தன்னை வணங்கி நமஸ்கரியாததைக் கண்டபோது, மூர்க்கம் நிறைந்தவனானான்.
6. ஆனாலும் மொர்தெகாயின்மேல் மாத்திரம் கைபோடுவது அவனுக்கு அற்பக்காரியமாகக் கண்டது; மொர்தெகாயின் ஜனங்கள் இன்னாரென்று ஆமானுக்கு அறிவிக்கப்பட்டிருந்தபடியால், அகாஸ்வேருவின் ராஜ்யமெங்கும் இருக்கிற மொர்தெகாயின் ஜனமாகிய யூதரையெல்லாம் சங்கரிக்க அவன் வகைதேடினான்.