14. நாம் சும்மாயிருப்பானேன்? கூடி வாருங்கள்; நாம் அரணான பட்டணங்களுக்குள் பிரவேசித்து, அங்கே சங்காரமாவோம்; நாம் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தபடியால், நம்முடைய தேவனாகிய கர்த்தர் நம்மைச் சங்காரம்பண்ணி, நமக்குப் பிச்சுக்கலந்த தண்ணீரைக் குடிக்கக்கொடுக்கிறார்.
15. சமாதானத்துக்குக் காத்திருந்தோம், பிரயோஜனமில்லை; ஆரோக்கிய காலத்துக்குக் காத்திருந்தோம், இதோ, ஆபத்து.
16. தாணிலிருந்து அவர்களுடைய குதிரைகளின் மூச்செறிதல் கேட்கப்படுகிறது; அவர்களுடைய பலத்த அஸ்வங்கள் கனைக்கிற சத்தத்தினால் தேசமெல்லாம் அதிருகிறது; அவர்கள் வந்து தேசத்தையும் அதில் உள்ளவைகளையும், பட்டணத்தையும் அதின் குடிகளையும் பட்சிப்பார்கள்.
17. மெய்யாய், இதோ, தடைகட்டப்படாத சர்ப்பங்களையும், கட்டுவிரியன்களையும் உங்களுக்குள் அனுப்புகிறேன், அவைகள் உங்களைக் கடிக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.