7. ஊற்றானது, தன் தண்ணீரைச் சுரக்கப்பண்ணுமாப்போல, அது தன் தீங்கைச் சுரக்கப்பண்ணுகிறது; அதிலே கொடுமையும் அழிம்பும் கேட்கப்படுகிறது; துக்கமும் காயங்களும் நித்தமும் எனக்கு முன்பாகக் காணப்படுகிறது.
8. எருசலேமே, என் ஆத்துமா உன்னை விட்டுப் பிரியாதபடிக்கும், நான் உன்னைப் பாழும் குடியற்ற தேசமும் ஆக்காதபடிக்கும் புத்திகேள்.
9. திராட்சக்குலைகளை அறுக்கிறவனைப்போல உன் கையைத் திரும்பக் கூடைகளின்மேல் போடென்று சொல்லி, அவர்கள் இஸ்ரவேலின் மீதியாயிருந்த கனியைத் திராட்சச்செடியின் கனியைப்போல் நன்றாய்ப் பொறுக்கிக்கொண்டுபோவார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
10. அவர்கள் கேட்கும்படி நான் யாரோடே பேசி எச்சரிப்பேன்? அவர்களுடைய செவி விருத்தசேதனமில்லாதது; அவர்கள் கேட்கமாட்டார்கள்; கர்த்தருடைய வசனம் அவர்களுக்கு நிந்தையாயிருக்கிறது; அதின்மேல் அவர்களுக்கு விருப்பமில்லை.
11. ஆகையால் நான் கர்த்தருடைய உக்கிரத்தால் நிறைந்திருக்கிறேன்; அதை அடக்கி இளைத்துப்போனேன்; வீதிகளிலுள்ள பிள்ளைகளின்மேலும், வாலிபருடைய கூட்டத்தின்மேலும் ஏகமாய் அதை ஊற்றிவிடுவேன்; புருஷரும், ஸ்திரீகளும், கிழவரும், பூரணவயதுள்ளவர்களுங்கூடப் பிடிக்கப்படுவார்கள்.
12. அவர்களுடைய வீடுகளும், அவர்களுடைய காணிபூமிகளும், அவர்களுடைய மனைவிகளோடே ஏகமாய் அந்நியர்வசமாகும்; என் கையை இந்தத் தேசத்தின் குடிகளுக்கு விரோதமாக நீட்டுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
13. அவர்களில், சிறியோர்முதல் பெரியோர்மட்டும், ஒவ்வொருவரும் பொருளாசைக்காரர்; இதுவுமல்லாமல் தீர்க்கதரிசிகள்முதல் ஆசாரியர்கள்மட்டும் ஒவ்வொருவரும் பொய்யர்.
14. சமாதானமில்லாதிருந்தும்: சமாதானம் சமாதானம் என்று சொல்லி, என் ஜனத்தின் காயங்களை மேற்பூச்சாய்க் குணமாக்குகிறார்கள்.
15. அவர்கள் அருவருப்பானதைச் செய்ததினிமித்தம் வெட்கப்படுகிறார்களோ? பரிச்சேதம் வெட்கப்படார்கள், நாணவும் அறியார்கள்; ஆதலால் விழுகிறவர்களுக்குள்ளே விழுவார்கள்; நான் அவர்களை விசாரிக்குங்காலத்தில் இடறுண்டுபோவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
16. வழிகளிலே நின்று, பூர்வ பாதைகள் எவையென்று கேட்டு விசாரித்து, நல்ல வழி எங்கே என்று பார்த்து, அதிலே நடவுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்களோ, நாங்கள் அதிலே நடக்கமாட்டோம் என்கிறார்கள்.
17. நான் உங்கள்மேல் காவலாளரையும் வைத்து, எக்காள சத்தத்துக்குச் செவிகொடுங்கள் என்றும் சொன்னேன்; அவர்களோ: நாங்கள் கேட்கமாட்டோம் என்கிறார்கள்.
18. ஆகையால் ஜாதிகளே, கேளுங்கள்; சபையே, அவர்களுக்குள் நடக்கிறதை அறிந்துகொள்.
19. பூமியே, கேள்; இந்த ஜனங்கள் என் வார்த்தைகளைக் கேளாமலிருந்து, என் நியாயப்பிரமாணத்துக்குச் செவிகொடாமல் அதை வெறுத்துவிடுகிறார்கள்; அவர்கள்மேல் நான் அவர்கள் நினைவுகளின் பலனாகிய தீங்கை வரப்பண்ணுவேன்.
20. சேபாவிலிருந்து வருகிற தூபவர்க்கமும், தூரதேசத்தினுடைய சுகந்தப்பட்டையும் எனக்கு என்னத்துக்கு? உங்கள் சர்வாங்கதகனங்கள் எனக்கு விருப்பமல்ல; உங்கள் பலிகள் எனக்கு இன்பமாயிராது.
21. ஆகையால் இதோ, நான் இந்த ஜனத்துக்கு இடறல்களை வைப்பேன்; அவைகள்மேல் பிதாக்களும், பிள்ளைகளும், குடியானவனும், அவனுக்கடுத்தவனும், ஏகமாய் இடறுண்டு அழிவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
22. இதோ, வடதேசத்திலிருந்து ஒரு ஜனம் வந்து, பூமியின் கடையெல்லைகளிலிருந்து ஒரு பெரிய ஜாதி எழும்பும்.
23. அவர்கள் வில்லும் வேலும் பிடித்துவருவார்கள்; அவர்கள் கொடியர், இரக்கம் அறியாதவர்கள்; அவர்கள் சத்தம் சமுத்திர இரைச்சலுக்குச் சமானமாயிருக்கும்; சீயோன் குமாரத்தியே, அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தசந்நத்தராய்க் குதிரைகளின்மேலேறி அணியணியாக வருவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.