15. ஜனத்தில் ஏழைகளான சிலரையும் நகரத்தில் மீதியான மற்ற ஜனத்தையும், பாபிலோன் ராஜாவின் வசமாக ஓடிவந்துவிட்டவர்களையும், மற்ற ஜனங்களையும் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் சிறைகளாகக் கொண்டுபோனான்.
16. ஆனால் தேசத்தாரில் ஏழைகளான சிலரைக் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் திராட்சத்தோட்டக்காரராகவும் பயிரிடுங்குடிகளாகவும் விட்டுவைத்தான்.
17. கர்த்தருடைய ஆலயத்திலிருந்த வெண்கலத் தூண்களையும், கர்த்தருடைய ஆலயத்திலிருந்த ஆதாரங்களையும், வெண்கலக் கடல்தொட்டியையும் கல்தேயர் உடைத்துப்போட்டு, அவைகளின் வெண்கலத்தையெல்லாம் பாபிலோனுக்கு எடுத்துக்கொண்டுபோனார்கள்.
18. செப்புச்சட்டிகளையும், சாம்பல் எடுக்கும் கரண்டிகளையும், வெட்டுக்கத்திகளையும், கலங்களையும், கலயங்களையும், ஆராதனைக்குரிய சகல வெண்கலப்பணிமுட்டுகளையும் எடுத்துக்கொண்டுபோனார்கள்.
19. பசும்பொன்னும் சுத்தவெள்ளியுமான கிண்ணங்களையும், தூபகலசங்களையும், கலங்களையும், சட்டிகளையும், விளக்குத்தண்டுகளையும், கலயங்களையும், கரகங்களையும் காவற்சேனாதிபதி எடுத்துக்கொண்டான்.
20. சாலொமோன் ராஜா கர்த்தருடைய ஆலயத்துக்காகச் செய்து வைத்த இரண்டு தூண்களும் ஒரு கடல்தொட்டியும் ஆதாரங்களின் கீழ்நின்ற பன்னிரண்டு வெண்கல ரிஷபங்களும் ஆகிய இவைகளுக்குரிய வெண்கலத்துக்கு நிறையில்லை.
21. அந்தத் தூண்களோவெனில், ஒவ்வொரு தூண் பதினெட்டுமுழ உயரமாயிருந்தது; பன்னிரண்டு முழ நூல் அதைச் சுற்றும்; நாலு விரற்கடை அதின் கனம்; உள்ளே குழாயாயிருந்தது.
22. அதின்மேல் வெண்கலக் குமிழ் இருந்தது; ஒரு குமிழின் உயரம் ஐந்து முழம், குமிழிலே சுற்றிலும் பின்னலும் மாதளம்பழங்களும் செய்திருந்தது; எல்லாம் வெண்கலமாயிருந்தது; அதற்குச் சரியாய் மற்றத் தூணுக்கும் மாதளம்பழங்களும் செய்திருந்தது.
23. தொண்ணூற்றாறு மாதளம்பழங்கள் நான்கு திசைகளுக்கும் எதிராகச் செய்திருந்தது; குமிழைச் சுற்றிலும் செய்திருந்த மாதளம்பழங்கள் நூறு.
24. காவற்சேனாதிபதி பிரதானஆசாரியனாகிய செராயாவையும், இரண்டாம் ஆசாரியனாகிய செப்பனியாவையும், வாசற்படியின் மூன்று காவற்காரரையும் பிடித்துக்கொண்டுபோனான்.
25. நகரத்திலோவென்றால் அவன் யுத்தமனுஷரின் விசாரிப்புக்காரனாகிய பிரதானி ஒருவனையும், ராஜாவின் மந்திரிகளில் நகரத்தில் அகப்பட்ட ஏழுபேரையும், தேசத்தின் ஜனத்தைச் சேவகம் எழுதுகிற தலைமையான சம்பிரதியையும், தேசத்து ஜனத்திலே பட்டணத்தின் நடுவில் அகப்பட்ட அறுபது பேரையும் பிடித்துக்கொண்டுபோனான்.
26. அவர்களைக் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் பிடித்து, அவர்களை ரிப்லாவுக்குப் பாபிலோன் ராஜாவினிடத்திற்குக் கொண்டுபோய்விட்டான்.
27. அப்பொழுது பாபிலோன் ராஜா ஆமாத் என்னும் தேசத்தின் பட்டணமாகிய ரிப்லாவிலே அவர்களை வெட்டிக்கொன்றுபோட்டான்; இவ்விதமாக யூதர்கள் தங்கள் தேசத்திலிருந்து சிறைகளாய்க் கொண்டுபோகப்பட்டார்கள்.
28. நேபுகாத்நேச்சார் சிறைபிடித்துப்போன ஜனங்களின் தொகை எவ்வளவென்றால், ஏழாம் வருஷத்தில் மூவாயிரத்து இருபத்து மூன்று யூதரும்,
29. நேபுகாத்நேச்சாருடைய பதினெட்டாம் வருஷத்தில் எருசலேமிலிருந்து எண்ணூற்று முப்பத்திரண்டு பேர்களும் கொண்டுபோகப்பட்டார்கள்.
30. நேபுகாத்நேச்சாருடைய இருபத்துமூன்றாம் வருஷத்தில் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் யூதரில் எழுநூற்று நாற்பத்தைந்துபேர்களைச் சிறைபிடித்துக்கொண்டுபோனான்; ஆக நாலாயிரத்து அறுநூறு பேர்களாம்.