எரேமியா 49:16-31 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

16. கன்மலை வெடிப்புகளில் வாசம்பண்ணி, மேடுகளின் உச்சியைப் பிடித்திருக்கிற உன்னால் உன் பயங்கரமும் உன் இருதயத்தின் அகந்தையும் உன்னை மோசம்போக்கிற்று; நீ கழுகைப்போல் உயரத்தில் உன் கூட்டைக் கட்டினாலும் அங்கேயிருந்து உன்னை விழப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

17. அப்படியே ஏதோம் பாழாகும்; அதைக் கடந்துபோகிறவன் எவனும் அதின் எல்லா வாதைகளினிமித்தமும் பிரமித்து ஈசல்போடுவான்.

18. சோதோமும் கொமோராவும் அவைகளின் சுற்றுப்புறங்களும் கவிழ்க்கப்பட்டதுபோல இதுவும் கவிழ்க்கப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அங்கே ஒருவனும் குடியிருப்பதில்லை, அதில் ஒரு மனுபுத்திரனும் தங்குவதில்லை.

19. இதோ, புரண்டு ஓடுகிற யோர்தானிடத்திலிருந்து சிங்கம் வருவதுபோல் பலவானுடைய தாபரத்துக்கு விரோதமாக வருகிறான்; அவனைச் சடிதியிலே அங்கேயிருந்து ஓடிவரப்பண்ணுவேன்; நான் அதற்கு விரோதமாய்க் கட்டளையிட்டு அனுப்பத்தெரிந்துகொள்ளப்பட்டவன் யார்? எனக்குச் சமானமானவன் யார்? எனக்கு மட்டுக்கட்டுகிறவன் யார்? எனக்கு முன்பாக நிலைநிற்கப்போகிற மேய்ப்பன் யார்?

20. ஆகையால் கர்த்தர் ஏதோமுக்கு விரோதமாக யோசித்த ஆலோசனையையும், அவர் தேமானின் குடிகளுக்கு விரோதமாக நினைத்திருக்கிற நினைவுகளையும் கேளுங்கள்; மந்தையில் சிறியவர்கள் மெய்யாகவே அவர்களைப் பிடித்திழுப்பார்கள், அவர்கள் இருக்கிற தாபரங்களை அவர் மெய்யாகவே பாழாக்குவார்.

21. அவைகளுக்குள் இடிந்துவிழும் சத்தத்தினாலே பூமி அதிரும்; கூக்குரலின் சத்தம் சிவந்த சமுத்திரமட்டும் கேட்கப்படும்.

22. இதோ, ஒருவன் கழுகைப்போல எழும்பி, பறந்துவந்து, தன் செட்டைகளைப் போஸ்றாவின்மேல் விரிப்பான்; அந்நாளிலே ஏதோமுடைய பராக்கிரமசாலிகளின் இருதயம் பிரசவவேதனைப்படுகிற ஸ்திரீயின் இருதயம்போல இருக்கும் என்கிறார்.

23. தமஸ்குவைக்குறித்துச் சொல்வது: ஆமாத்தும் அர்ப்பாத்தும் கலங்குகிறது; பொல்லாத செய்தியை அவர்கள் கேட்டபடியினால் கரைந்துபோகிறார்கள்; சமுத்திரத்தோரமாய்ச் சஞ்சலமுண்டு; அதற்கு அமைதலில்லை.

24. தமஸ்கு தளர்ந்துபோகும், புறங்காட்டி ஓடிப்போகும்; திகில் அதைப் பிடித்தது; பிரசவ ஸ்திரீயைப்போல இடுக்கமும் வேதனைகளும் அதைப் பிடித்தது.

25. சந்தோஷமான என் ஊராகிய அந்தப் புகழ்ச்சியுள்ள நகரம் தப்பவிடப்படாமற்போயிற்றே!

26. ஆதலால் அதின் வாலிபர் அதின் வீதிகளில் விழுந்து, யுத்த மனுஷர் எல்லாரும் அந்நாளிலே சங்காரமாவார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

27. தமஸ்குவின் மதில்களில் தீக்கொளுத்துவேன்; அது பெனாதாத்தின் அரமனைகளைப் பட்சிக்கும் என்கிறார்.

28. பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் முறியடிக்கும் கேதாரையும் காத்சோருடைய இராஜ்யங்களையும் குறித்துக் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: எழுப்பி, கேதாருக்கு விரோதமாகப் போய், கீழ்த்திசைப் புத்திரரைப்பாழாக்குங்கள்.

29. அவர்களுடைய கூடாரங்களையும் அவர்களுடைய மந்தைகளையும் வாங்கி, அவர்களுடைய திரைகளையும் அவர்களுடைய எல்லாத் தட்டுமுட்டுகளையும் அவர்களுடைய ஒட்டகங்களையும் தங்களுக்கென்று கொண்டுபோய், எத்திசையும் பயம் என்று சொல்லி, அவர்கள்மேல் ஆர்ப்பரிப்பார்கள்.

30. காத்சோரின் குடிகளே, ஓடி, தூரத்தில் அலையுங்கள்; பள்ளத்தில் ஒதுங்கிப் பதுங்குங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் உங்களுக்கு விரோதமாக ஆலோசனைசெய்து, உங்களுக்கு விரோதமாக உபாயங்களைச் சிந்தித்திருக்கிறான்.

31. அஞ்சாமல் நிர்விசாரமாய்க் குடியிருக்கிற ஜாதிக்கு விரோதமாக எழும்பிப்போங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அதற்கு வாசல்களுமில்லை, தாழ்ப்பாள்களுமில்லை; அவர்கள் தனிப்படத் தங்கியிருக்கிறார்கள்.

எரேமியா 49