எரேமியா 49:1-16 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

1. அம்மோன் புத்திரரைக்குறித்துக் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேலுக்குக் குமாரர் இல்லையோ? அவனுக்குச் சுதந்தரவாளி இல்லையோ? அவர்கள் ராஜா காத்தேசத்தைச் சுதந்தரித்துக்கொண்டு, அதின் ஜனம் இவன் பட்டணங்களில் குடியிருப்பானேன்?

2. ஆகையால், இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது அம்மோன் புத்திரரின் பட்டணமாகிய ரப்பாவிலே யுத்தத்தின் ஆர்ப்பரிப்பைக் கேட்கப்பண்ணுவேன்; அது பாழான மண்மேடாகும்; அதற்கடுத்த ஊர்களும் அக்கினியால் சுட்டெரிக்கப்படும்; ஆனாலும் இஸ்ரவேல் தன் தேசத்தைச் சுதந்தரித்துக்கொண்டவர்களின் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

3. எஸ்போனே, அலறு; ஆயி பாழாக்கப்பட்டது; ரப்பாவின் குமாரத்திகளே, ஓலமிடுங்கள்; இரட்டை உடுத்திக்கொண்டு, புலம்பி, வேலிகளில் சுற்றித்திரியுங்கள்; அவர்கள் ராஜா அதின் ஆசாரியர்களோடும் அதின் பிரபுக்களோடுங்கூடச் சிறைப்பட்டுப்போவான்.

4. எனக்கு விரோதமாய் வருகிறவன் யார் என்று சொல்லி, உன் செல்வத்தை நம்பின சீர்கெட்ட குமாரத்தியே, நீ பள்ளத்தாக்குகளைப்பற்றிப் பெருமைபாராட்டுவானேன்? உன் பள்ளத்தாக்குக் கரைந்து போகிறது.

5. இதோ, உன் சுற்றுப்புறத்தார் எல்லாராலும் உன்மேல் திகிலை வரப்பண்ணுவேன் என்று சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; நீங்கள் அவரவர் தம்தம் முன் இருக்கும் வழியே ஓடத் துரத்தப்படுவீர்கள்; வலசைவாங்கி ஓடுகிறவர்களைச் சேர்ப்பார் ஒருவருமில்லை.

6. அதற்குப்பின்பு அம்மோன் புத்திரருடைய சிறையிருப்பைத் திருப்புவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

7. ஏதோமைக்குறித்துச் சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: தேமானிலே இனி ஞானமில்லையோ? ஆலோசனை விவேகிகளைவிட்டு அழிந்ததோ? அவர்களுடைய ஞானம் கெட்டுப்போயிற்றோ?

8. தேதானின் குடிகளே, ஓடுங்கள், முதுகைக் காட்டுங்கள், பள்ளங்களில் பதுங்குங்கள்; ஏசாவை விசாரிக்குங்காலத்தில் அவன் ஆபத்தை அவன்மேல் வரப்பண்ணுவேன்.

9. திராட்சப்பழங்களை அறுக்கிறவர்கள் உன்னிடத்திலே வந்தார்களாகில், பின்பறிக்கிறதற்குக் கொஞ்சம் வையார்களோ? இராத்திரியில் திருடர் வந்தார்களாகில், தங்களுக்குப் போதுமென்கிறமட்டும் கொள்ளையடிப்பார்கள் அல்லவோ?

10. நானோ ஏசாவை வெறுமையாக்கி, அவன் ஒளித்துக்கொள்ளக் கூடாதபடிக்கு அவனுடைய மறைவிடங்களை வெளிப்படுத்திப்போடுவேன்; அவனுடைய சந்ததியாரும் அவனுடைய சகோதரரும் அவனுடைய அயலாரும் அழிக்கப்படுவார்கள்; அவன் இனி இரான்.

11. திக்கற்றவர்களாய்ப்போகும் உன் பிள்ளைகளை ஒப்புவி, நான் அவர்களை உயிரோடே காப்பாற்றுவேன்; உன் விதவைகள் என்னை நம்புவார்களாக.

12. கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, பாத்திரத்தில் குடிக்கவேண்டுமென்கிற நியாயத்தீர்ப்புக்கு உள்ளாயிராதவர்கள் அதில் குடித்தார்கள்; நீ குற்றமற்று நீங்கலாயிருப்பாயோ? நீ நீங்கலாயிராமல் அதில் நிச்சயமாய்க் குடிப்பாய்.

13. போஸ்றா பாழும் நிந்தையும் அவாந்தரமும் சாபமுமாக இருக்குமென்றும், அதின் பட்டணங்கள் எல்லாம் நித்திய வனாந்தரங்களாயிருக்குமென்றும் என்னைக்கொண்டு ஆணையிட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

14. நீங்கள் கூடிக்கொண்டு, அதற்கு விரோதமாக வந்து, யுத்தம்பண்ணுகிறதற்கு எழும்புங்கள் என்று சொல்ல, ஜாதிகளிடத்தில் ஸ்தானாதிபதியை அனுப்புகிற செய்தியைக் கர்த்தரிடத்திலே கேள்விப்பட்டேன்.

15. இதோ, உன்னை ஜாதிகளுக்குள்ளே சிறியதும், மனுஷருக்குள்ளே அசட்டை பண்ணப்பட்டதுமாக்குகிறேன் என்கிறார்.

16. கன்மலை வெடிப்புகளில் வாசம்பண்ணி, மேடுகளின் உச்சியைப் பிடித்திருக்கிற உன்னால் உன் பயங்கரமும் உன் இருதயத்தின் அகந்தையும் உன்னை மோசம்போக்கிற்று; நீ கழுகைப்போல் உயரத்தில் உன் கூட்டைக் கட்டினாலும் அங்கேயிருந்து உன்னை விழப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

எரேமியா 49