8. பாழாக்குகிறவன் எல்லாப் பட்டணங்களின்மேலும் வருவான்; ஒரு பட்டணமும் தப்பிப்போவதில்லை; பள்ளதாக்குகளும் கெட்டுப்போகும்; சமனான பூமியும் அழிக்கப்படும் என்று கர்த்தர் சொன்னார்.
9. மோவாபுக்குச் செட்டைகளைக் கொடுங்கள்; அது பறந்துபோகட்டும்; அதின் பட்டணங்கள் குடிகளில்லாமல் பாழாய்ப்போகும்.
10. கர்த்தருடைய வேலையை அசதியாய்ச் செய்கிறவன் சபிக்கப்பட்டவன்; இரத்தம் சிந்தாதபடிக்குத் தன் பட்டயத்தை அடக்கிக்கொள்ளுகிறவன் சபிக்கப்பட்டவன்.
11. மோவாப் தன் சிறுவயதுமுதல் சுகமாய் வாழ்ந்தது; அது ஒரு பாத்திரத்திலிருந்து மறு பாத்திரத்தில் வார்க்கப்படாமலும், அதின் வண்டல்களின்மேல் அசையாமலும் இருந்தது; அது சிறையிருப்புக்குப் போனதில்லை; ஆதலால் அதின் ருசி அதில் நிலைத்திருந்தது; அதின் வாசனை வேறுபடவில்லை.
12. ஆகையால், இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது கவிழ்த்துப்போடுகிறவர்களை அதற்கு அனுப்புவேன்; அவர்கள் அதைக் கவிழ்த்து, அதின் பாத்திரங்களை வெறுமையாக்கி, அதின் ஜாடிகளை உடைத்துப்போடுவார்கள்.
13. அப்பொழுது இஸ்ரவேல் சந்ததி தங்கள் நம்பிக்கையான பெத்தேலாலே வெட்கப்பட்டதுபோல, மோவாப் கேமோஷாலே வெட்கப்படும்.
14. நாங்கள் பராக்கிரசாலிகளென்றும், நாங்கள் யுத்தசன்னத்தரென்றும் நீங்கள் சொல்லுகிறதென்ன?
15. மோவாப் அழிந்தது, அதின் பட்டணங்கள் எரிந்துபோயின; அதின் திறமையுள்ள வாலிபர் கொலைகளத்துக்கு இறங்குகிறார்கள் என்று சேனைகளின் கர்த்தர் என்னும் நாமமுள்ள ராஜா சொல்லுகிறார்.
16. மோவாபின் ஆபத்துவரச் சமீபமாயிருக்கிறது; அதின் தீங்கு மிகவும் தீவிரித்துவருகிறது.
17. அதின் சுற்றுப்புறத்தாரும் அதின் பேரை அறிந்தவர்களுமாகிய நீங்கள் எல்லாரும் அதற்காக அங்கலாய்த்துக்கொள்ளுங்கள்; பெலனான தடியும் அலங்காரமான கோலும் எப்படி உடைந்ததென்று சொல்லுங்கள்.
18. தீபோன் பட்டணவாசியான குமாரத்தியே, நீ உன் மகிமையை விட்டிறங்கி, தாகத்தோடே உட்கார்ந்திரு; மோவாபைப் பாழாக்குகிறவன் உனக்கு விரோதமாய் வந்து, உன் அரண்களை அழித்துப்போடுவான்.