எரேமியா 46:1-15 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

1. புறஜாதிகளுக்கு விரோதமாய் எரேமியா தீர்க்கதரிசிக்கு உண்டான கர்த்தருடைய வசனம்:

2. எகிப்தைக்குறித்தும், ஐப்பிராத்து நதியண்டையில் கர்கேமிசிலே இருந்ததும் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார், யோசியாவின் குமாரனாகிய யோயாக்கீம் என்னும் யூதா ராஜாவின் நாலாம் வருஷத்திலே முறிய அடித்ததுமான பார்வோன்நேகோ என்னப்பட்ட எகிப்து ராஜாவின் ராணுவத்தைக்குறித்தும் அவர் சொல்லுகிறது என்னவென்றால்:

3. கேடகங்களையும் பரிசைகளையும் ஆயத்தம்பண்ணி, யுத்தத்துக்கு வாருங்கள்.

4. குதிரைவீரரே, குதிரைகளின்மேல் சேணங்களை வைத்து ஏறி, தலைச்சீராயை அணிந்துகொண்டு நில்லுங்கள்; ஈட்டிகளைத் துலக்கி, கவசங்களைத் தரித்துக்கொள்ளுங்கள்.

5. அவர்கள் கலங்கி, பின்வாங்குகிறதை நான் காண்கிறதென்ன? சுற்றிலுமுண்டான பயங்கரத்தினிமித்தம் அவர்களுடைய பராக்கிரமசாலிகள் முறியுண்டு, திரும்பிப்பாராமல் ஓட்டமாய் ஓடிப்போகிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

6. வேகமாய் ஓடுகிறவன் ஓடிப்போகவேண்டாம்; பராக்கிரமசாலி தப்பிப்போகவேண்டாம்; வடக்கே ஐப்பிராத்து நதியண்டையிலே அவர்கள் இடறிவிழுவார்கள்.

7. பிரவாகம்போல் புரண்டுவருகிற இவன் யார்? அலைகள் மோதியடிக்கிற நதிகள்போல் எழும்பிவருகிற இவன் யார்?

8. எகிப்தியனே பிரவாகத்தைப்போல் புரண்டுவருகிறான், அவனே அலைகள் மோதியடிக்கிற நதிகள்போல எழும்பிவருகிறான்; நான் போய், தேசத்தை மூடி, நகரத்தையும் அதில் குடியிருக்கிறவர்களையும் அழிப்பேன் என்றான்.

9. குதிரைகளே, போய் ஏறுங்கள்; இரதங்களே, கடகட என்று ஓடுங்கள்; பராக்கிரமசாலிகளும், கேடகம் பிடிக்கிற எத்தியோப்பியரும், பூத்தியரும், வில்லைப்பிடித்து நாணேற்றுகிற லீதியரும் புறப்படக்கடவர்கள்.

10. ஆனாலும், இது சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவரின் நாளும், அவர் தம்முடைய சத்துருக்களுக்கு நீதியைச் சரிக்கட்டுகிற நாளுமாயிருக்கிறது; ஆகையால், பட்டயம் பட்சித்து, அவர்களுடைய இரத்தத்தால் திருப்தியாகி வெறித்திருக்கும்; வடதேசத்தில் ஐப்பிராத்து நதியண்டையிலே சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவருக்கு ஒரு யாகமும் உண்டு.

11. எகிப்தின் குமாரத்தியாகிய கன்னிகையே, நீ கீலேயாத்துக்குப்போய், பிசின் தைலம் வாங்கு; திரளான அவிழ்தங்களை நீ கூட்டுகிறது விருதா, உனக்கு ஆரோக்கியமுண்டாகாது.

12. ஜாதிகள் உன் இலச்சையைக் கேள்விப்பட்டார்கள்; உன் கூக்குரலால் தேசம் நிறைந்தது; பராக்கிரமசாலியின்மேல் பராக்கிரமசாலி இடறி, இருவரும் ஏகமாய் விழுந்தார்கள் என்றார்.

13. எகிப்துதேசத்தை அழிக்கப் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் வருவானென்பதைக்குறித்து, எரேமியா தீர்க்கதரிசியினிடத்தில் கர்த்தர் சொன்ன வசனம்:

14. ஆயத்தப்பட்டு நில், பட்டயம் உன்னைச் சுற்றிலும் உண்டானதைப் பட்சித்துப்போடுகிறதென்று சொல்லி, எகிப்திலே அறிவித்து, மிக்தோலிலே கூறி, நோப்பிலும் தக்பானேசிலும் பிரசித்தம்பண்ணுங்கள்.

15. உன் வீரர் வாரிக்கொள்ளப்படுகிறதென்ன? கர்த்தர் அவர்களைத் தள்ளினதால் அவர்கள் நிலைநிற்கவில்லை.

எரேமியா 46