19. என் குடல்கள், என் குடல்களே நோகிறது; என் உள்ளம் வேதனைப்படுகிறது, என் இருதயம் என்னில் கதறுகிறது; நான் பேசாமல் அமர்ந்திருக்கக்கூடாது; என் ஆத்துமாவே, எக்காளத்தின் சத்தத்தையும், யுத்தத்தின் ஆர்ப்பரிப்பையும் கேட்டாயே.
20. நாசத்துக்குமேல் நாசம் வருகிறதாகக் கூறப்படுகிறது; தேசமெல்லாம் பாழாகிறது; அசுப்பிலே என் கூடாரங்களும், ஒரு நிமிஷத்திலே என் திரைகளும் பாழாக்கப்படுகிறது.
21. நான் எதுவரைக்கும் கொடியைக்கண்டு, எக்காளத்தின் சத்தத்தைக் கேட்பேன்.
22. என் ஜனங்களோ மதியற்றவர்கள், என்னை அவர்கள் அறியாதிருக்கிறார்கள்; அவர்கள் பைத்தியமுள்ள பிள்ளைகள், அவர்களுக்கு உணர்வே இல்லை; பொல்லாப்புச்செய்ய அவர்கள் அறிவாளிகள், நன்மைசெய்யவோ அவர்கள் அறிவில்லாதவர்கள்.
23. பூமியைப் பார்த்தேன், அது ஒழுங்கின்மையும் வெறுமையுமாயிருந்தது; வானங்ளையும் பார்த்தேன், அவைகளுக்கு ஒளியில்லாதிருந்தது.
24. பர்வதங்களைப் பார்த்தேன், அவைகள் அதிர்ந்தன; எல்லாக் குன்றுகளும் அசைந்தன.
25. பின்னும் நான் பார்க்கும்போது, மனுஷனில்லை; ஆகாசத்துப் பறவைகளெல்லாம் பறந்துபோயின.
26. பின்னும் நான் பார்க்கும்போது, கர்த்தராலும், அவருடைய உக்கிரகோபத்தாலும் பயிர்நிலம் வனாந்தரமாயிற்று; அதின் பட்டணங்களெல்லாம் இடிந்துபோயின.
27. தேசமெல்லாம் பாழாய்ப்போகும்; ஆகிலும் சர்வசங்காரம் செய்யேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
28. இதினிமித்தம் பூமி புலம்பும், உயர இருக்கிற வானங்கள் கறுத்துப்போகும்; நான் அதைச் சொன்னேன், அதை நிர்ணயம்பண்ணினேன்; நான் மனஸ்தாபப்படுவதும் இல்லை; நான் அதைவிட்டுப் திரும்புவதும் இல்லை.