எரேமியா 36:8-20 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

8. அப்படியே நேரியாவின் குமாரனாகிய பாருக்கு அந்தப் புஸ்தகத்தில், கர்த்தருடைய ஆலயத்தில் கர்த்தருடைய வார்த்தைகளை வாசிக்கும்படி எரேமியா தீர்க்கதரிசி தனக்குக் கற்பித்தபடியெல்லாம் செய்தான்.

9. யோசியாவின் குமாரனாகிய யோயாக்கீம் என்னும் யூதா ராஜாவின் ஐந்தாம் வருஷத்து ஒன்பதாம் மாதத்திலே, எருசலேமிலிருக்கிற எல்லா ஜனத்துக்கும், யூதாவின் பட்டணங்களிலிருந்து எருசலேமுக்கு வருகிற எல்லா ஜனத்துக்கும், கர்த்தருக்கு முன்பாக உபவாசம் செய்யவேண்டுமென்று கூறப்பட்டது.

10. அப்பொழுது பாருக்கு கர்த்தருடைய ஆலயத்தின் மேற்பிராகாரத்தில், கர்த்தருடைய ஆலயத்து வாசலின் நடைக்கு அருகான சாப்பானுடைய குமாரனாகிய கெமரியா என்னும் சம்பிரதியின் அறையிலே, அந்தப் புஸ்தகத்திலுள்ள எரேமியாவின் வார்த்தைகளை ஜனங்கள் எல்லாரும் கேட்க வாசித்தான்.

11. சாப்பானுடைய குமாரனாகிய கெமரியாவின் மகன் மிகாயா அந்தப் புஸ்தகத்திலுள்ள கர்த்தருடைய வார்த்தைகளையெல்லாம் வாசிக்கக் கேட்டபோது,

12. அவன் ராஜாவின் அரமனைக்குப்போய், சம்பிரதியின் அறையில் பிரவேசித்தான்; இதோ, அங்கே எல்லாப் பிரபுக்களும் சம்பிரதியாகிய எலிசாமாவும் செமாயாவின் குமாரனாகிய தெலாயாவும், அக்போரின் குமாரனாகிய எல்நாத்தானும், சாப்பானின் குமாரனாகிய கெமரியாவும், அனனியாவின் குமாரனாகிய சிதேக்கியாவும், மற்ற எல்லாப் பிரபுக்களும் உட்கார்ந்திருந்தார்கள்.

13. பாருக்கு ஜனத்தின் செவிகள் கேட்கப் புஸ்தகத்திலுள்ளவைகளை வாசிக்கையில், தான் கேட்ட எல்லா வார்த்தைகளையும் மிகாயா அவர்களுக்குத் தெரிவித்தான்.

14. அப்பொழுது எல்லாப் பிரபுக்களும் கூஷியின் குமாரனாகிய செலேமியாவின் மகனான நெத்தானியாவினுடைய குமாரனாயிருக்கிற யெகுதியைப் பாருக்கினிடத்தில் அனுப்பி, ஜனங்கள் கேட்க நீ வாசித்துக்கொண்டிந்த சுருளை உன் கையில் எடுத்துக்கொண்டுவா என்று சொல்லச் சொன்னார்கள்; ஆகையால், நேரியாவின் குமாரனாகிய பாருக்கு சுருளைத் தன் கையில் எடுத்துக்கொண்டு, அவர்களிடத்துக்கு வந்தான்.

15. அவர்கள் அவனை நோக்கி: நீ உட்கார்ந்துகொண்டு, நாங்கள் கேட்க வாசியென்றார்கள்; அவர்கள் கேட்க வாசித்தான்.

16. அப்பொழுது அவர்கள் எல்லா வார்த்தைகளையும் கேட்கையில் பயமுற்றவர்களாய் ஒருவரையொருவர் பார்த்து, பாருக்கை நோக்கி: இந்த எல்லா வார்த்தைகளையும் ராஜாவுக்கு நிச்சயமாய் அறிவிப்போம் என்றார்கள்.

17. அவன் வாய் சொல்ல, நீ இந்த வார்த்தைகளையெல்லாம் எவ்விதமாய் எழுதினாய் அதை எங்களுக்குச் சொல் என்று பாருக்கைக் கேட்டார்கள்.

18. அதற்குப் பாருக்கு: அவர் தமது வாயினால் இந்த எல்லா வார்த்தைகளையும் உரைத்து, என்னுடனே சொன்னார், நான் மையினால் புஸ்தகத்தில் எழுதினேன் என்றான்.

19. அப்பொழுது பிரபுக்கள் பாருக்கை நோக்கி: நீயும் எரேமியாவும் போய் ஒளித்துக்கொள்ளுங்கள்; நீங்கள் இருக்கும் இடத்தை ஒருவரும் அறியப்படாது என்று சொல்லி,

20. சுருளைச் சம்பிரதியாகிய எலிசாமாவின் அறையிலே வைத்து, ராஜாவினிடத்துக்கு அரமனையிலே போய், ராஜாவின் செவிகளுக்கு இந்த வார்த்தைகளையெல்லாம் அறிவித்தார்கள்.

எரேமியா 36