16. அப்பொழுது அவர்கள் எல்லா வார்த்தைகளையும் கேட்கையில் பயமுற்றவர்களாய் ஒருவரையொருவர் பார்த்து, பாருக்கை நோக்கி: இந்த எல்லா வார்த்தைகளையும் ராஜாவுக்கு நிச்சயமாய் அறிவிப்போம் என்றார்கள்.
17. அவன் வாய் சொல்ல, நீ இந்த வார்த்தைகளையெல்லாம் எவ்விதமாய் எழுதினாய் அதை எங்களுக்குச் சொல் என்று பாருக்கைக் கேட்டார்கள்.
18. அதற்குப் பாருக்கு: அவர் தமது வாயினால் இந்த எல்லா வார்த்தைகளையும் உரைத்து, என்னுடனே சொன்னார், நான் மையினால் புஸ்தகத்தில் எழுதினேன் என்றான்.
19. அப்பொழுது பிரபுக்கள் பாருக்கை நோக்கி: நீயும் எரேமியாவும் போய் ஒளித்துக்கொள்ளுங்கள்; நீங்கள் இருக்கும் இடத்தை ஒருவரும் அறியப்படாது என்று சொல்லி,
20. சுருளைச் சம்பிரதியாகிய எலிசாமாவின் அறையிலே வைத்து, ராஜாவினிடத்துக்கு அரமனையிலே போய், ராஜாவின் செவிகளுக்கு இந்த வார்த்தைகளையெல்லாம் அறிவித்தார்கள்.
21. அப்பொழுது ராஜா அந்தச் சுருளை எடுத்துக்கொண்டுவர யெகுதியை அனுப்பினான்; யெகுதி அதைச் சம்பிரதியாகிய எலிசாமாவின் அறையிலிருந்து எடுத்துக்கொண்டுவந்து, ராஜா கேட்கவும், ராஜாவினிடத்தில் நின்ற எல்லாப் பிரபுக்களும் கேட்கவும் வாசித்தான்.
22. ஒன்பதாம் மாதத்திலே ராஜா, குளிர்காலத்துக்குத் தங்கும் வீட்டில் உட்கார்ந்திருந்தான்; அவனுக்கு முன்பாக கணப்பு மூட்டியிருந்தது.
23. யெகுதி மூன்று நாலு பத்திகளை வாசித்த பின்பு, ராஜா ஒரு சூரிக்கத்தியினால் அதை அறுத்து, சுருளனைத்தும் கணப்பிலுள்ள அக்கினியிலே வெந்துபோகும்படி, கணப்பிலிருந்த அக்கினியில் எறிந்து போட்டான்.
24. ராஜாவாயினும், அந்த வார்த்தைகளையெல்லாம் கேட்ட அவனுடைய சகல ஊழியக்காரராயினும் பயப்படவுமில்லை, தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொள்ளவுமில்லை.
25. எல்நாத்தானும், தெலாயாவும், கெமரியாவுமோ: அந்தச் சுருளைச் சுட்டெரிக்கவேண்டாம் என்று ராஜாவினிடத்தில் விண்ணப்பம்பண்ணினார்கள்; ஆனாலும், அவர்களுக்கு அவன் செவிகொடாமல்,
26. பாருக்கு என்னும் சம்பிரதியையும் எரேமியா தீர்க்கதரிசியையும் பிடிக்கும்படிக்கு, ராஜா அம்மெலேகின் குமாரனாகிய யெரமெயேலுக்கும், அஸ்ரியேலின் குமாரனாகிய செராயாவுக்கும், அப்தெயேலின் குமாரனாகிய செலேமியாவுக்கும் கட்டளை கொடுத்தான்; ஆனாலும் கர்த்தர் அவர்களை மறைத்தார்.
27. ராஜா அந்தச் சுருளையும், அதிலே எரேமியாவின் வாய் சொல்லப் பாருக்கு எழுதியிருந்த வார்த்தைகளையும் சுட்டெரித்தபின்பு, எரேமியாவுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அவர்: