எரேமியா 35:6-14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

6. அதற்கு அவர்கள்: நாங்கள் திராட்சரசம் குடிக்கிறதில்லை; ஏனென்றால், ரேகாபின் குமாரனாகிய எங்களுடைய தகப்பன் யோனதாப், நீங்கள் பரதேசிகளாய்த் தங்குகிற தேசத்தில் நீடித்திருக்கும்படிக்கு,

7. நீங்களும் உங்கள் பிள்ளைகளும் என்றென்றைக்கும் திராட்சரசம் குடியாமலும், வீட்டைக் கட்டாமலும், விதையை விதையாமலும், திராட்சத்தோட்டத்தை நாட்டாமலும், அதைக் கையாளாமலும், உங்களுடைய எல்லா நாட்களிலும் கூடாரங்களிலே குடியிருப்பீர்களாக என்று எங்களுக்குக் கட்டளையிட்டார்.

8. அப்படியே எங்களுடைய எல்லா நாட்களிலும் நாங்களும் எங்கள் ஸ்திரீகளும் எங்கள் குமாரரும் எங்கள் குமாரத்திகளும் திராட்சரசம் குடியாமலும்,

9. நாங்கள் குடியிருக்க வீடுகளைக் கட்டாமலும், ரேகாபின் குமாரனாகிய எங்களுடைய தகப்பன் யோனதாபின் சத்தத்துக்குக் கீழ்ப்படிந்திருக்கிறோம்; எங்களுக்குத் திராட்சத்தோட்டமும் வயலும் விதைப்பாடுமில்லை.

10. நாங்கள் கூடாரங்களில் குடியிருந்து, எங்கள் தகப்பனாகிய யோனதாப் எங்களுக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் கீழ்ப்படிந்து செய்துவந்தோம்.

11. ஆனாலும் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் இந்த தேசத்தில் வந்தபோது, நாம் கல்தேயருடைய இராணுவத்துக்கும் சீரியருடைய இராணுவத்துக்கும் தப்பும்படி எருசலேமுக்குப் போவோம் வாருங்கள் என்று சொன்னோம்; அப்படியே எருசலேமில் தங்கியிருக்கிறோம் என்றார்கள்.

12. அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை எரேமியாவுக்கு உண்டாகி, அவர்:

13. இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், நீ போய், யூதாவின் மனுஷரையும் எருசலேமின் குடிகளையும் நோக்கி: நீங்கள் என் வார்த்தைகளைக் கேட்டு, புத்தியை ஏற்றுக்கொள்ளுகிறதில்லையோ என்று கர்த்தர் சொல்லுகிறார்.

14. திராட்சரசம் குடியாதபடிக்கு, ரேகாபின் குமாரனாகிய யோனதாப் தன் புத்திரருக்குக் கட்டளையிட்ட வார்த்தைகள் கைக்கொள்ளப்பட்டுவருகிறது; அவர்கள் இந்நாள்மட்டும் அதைக் குடியாமல், தங்கள் தகப்பனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிகிறார்கள்; ஆனாலும் நான் உங்களுக்கு ஏற்கனவே சொல்லிக்கொண்டேயிருந்தும், எனக்குக் கீழ்ப்படியாமற்போனீர்கள்.

எரேமியா 35