எரேமியா 3:6-17 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

6. யோசியா ராஜாவின் நாட்களிலே கர்த்தர் என்னை நோக்கி: சீர்கெட்ட இஸ்ரவேல் என்பவள் செய்ததைக் கண்டாயா? அவள் உயரமான சகல மலையின்மேலும், பச்சையான சகல மரத்தின்கீழும் போய், அங்கே வேசித்தனம்பண்ணினாள்.

7. அவள் இப்படியெல்லாம் செய்த பின்பு: நீ என்னிடத்தில் திரும்பிவா என்று நான் சொன்னேன்; அவளோ திரும்பவில்லை; இதை அவளுடைய சகோதரியாகிய யூதா என்கிற துரோகி கண்டாள்.

8. சீர்கெட்ட இஸ்ரவேல் என்பவள் விபசாரம்பண்ணின முகாந்தரங்கள் எல்லாவற்றினிமித்தமும் நான் அவளை அனுப்பிவிட்டு, அவளுடைய தள்ளுதற்சீட்டை அவளுக்குக் கொடுத்தபோதும், அவளுடைய சகோதரியாகிய யூதா என்கிற துரோகி பயப்படாமல்; இவளும் போய் வேசித்தனம்பண்ணினாள், இதை நான் கண்டேன்.

9. பிரசித்தமான அவளுடைய வேசித்தனத்தினாலே தேசம் தீட்டுப்பட்டுப்போயிற்று; கல்லோடும் மரத்தோடும் விபசாரம்பண்ணிக்கொண்டிருந்தாள் என்றார்.

10. இவைகளையெல்லாம் கண்டும், யூதா என்கிற அவளுடைய சகோதரியாகிய துரோகி, கள்ளத்தனமாய்த் திரும்பினாளேயன்றி, முழு இருதயத்தோடும் என்னிடத்தில் திரும்பவில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார்.

11. பின்னும் கர்த்தர் என்னை நோக்கி: யூதா என்கிற துரோகியைப்பார்க்கிலும் சீர்கெட்ட இஸ்ரவேல் என்பவள் தன்னை நீதியுள்ளவளாக்கினாள்.

12. நீ போய் வடதிசையை நோக்கிக் கூறவேண்டிய வார்த்தைகள் என்னவென்றால்: சீர்கெட்ட இஸ்ரவேலே, திரும்பு என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் உங்கள்மேல் என் கோபத்தை இறங்கப்பண்ணுவதில்லை; நான் கிருபையுள்ளவரென்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் என்றைக்கும் கோபம் வைக்கமாட்டேன்.

13. நீயோ, உன் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணி, பச்சையான சகல மரத்தின்கீழும் அந்நியரோடே சோரமார்க்கமாய் நடந்து, உன் அக்கிரமத்தையும், என் சத்தத்துக்குச் செவிகொடாமற்போனதையும் ஒத்துக்கொள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

14. சீர்கெட்ட பிள்ளைகளே, திரும்புங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் உங்கள் நாயகர்; நான் உங்களை ஊரில் ஒருவனும், வம்சத்தில் இரண்டு பேருமாகத் தெரிந்து, உங்களைச் சீயோனுக்கு அழைத்துக்கொண்டுவந்து,

15. உங்களுக்கு என் இருதயத்துக்கு ஏற்ற மேய்ப்பர்களைக் கொடுப்பேன், அவர்கள் உங்களை அறிவோடும் புத்தியோடும் மேய்ப்பார்கள்.

16. நீங்கள் தேசத்திலே பெருகிப் பலுகுகிற அந்நாட்களிலே, அவர்கள் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியென்று இனிச் சொல்வதில்லை; அது அவர்கள் மனதில் எழும்புவதும் இல்லை; அது அவர்கள் நினைவில் வருவதும் இல்லை; அதைக் குறித்து விசாரிப்பதும் இல்லை; அது இனிச் செப்பனிடப்படுவதும் இல்லை என்று கர்த்தர் சொல்லுகிறார்.

17. அக்காலத்திலே எருசலேமைக் கர்த்தருடைய சிங்காசனம் என்பார்கள்; சகல ஜாதியாரும் எருசலேமில் விளங்கிய கர்த்தருடைய நாமத்தினிமித்தம் அதினிடமாகச் சேர்வார்கள்; அவர்கள் இனித் தங்கள் பொல்லாத இருதயத்தின் இச்சையின்படி நடவார்கள்.

எரேமியா 3