10. பாபிலோனிலே எழுபதுவருஷம் நிறைவேறினபின்பு நான் உங்களைச் சந்தித்து, உங்களை இவ்விடத்துக்குத் திரும்பிவரப்பண்ணும்படிக்கு உங்கள்மேல் என் நல்வார்த்தையை நிறைவேறப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
11. நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே.
12. அப்பொழுது நீங்கள் கூடிவந்து, என்னைத் தொழுதுகொண்டு, என்னை நோக்கி விண்ணப்பம்பண்ணுவீர்கள்; நான் உங்களுக்குச் செவிகொடுப்பேன்.
13. உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள்.
14. நான் உங்களுக்குக் காணப்படுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் உங்கள் சிறையிருப்பைத் திருப்பி, நான் உங்களைத் துரத்திவிட்ட எல்லா ஜாதிகளிலும் எல்லா இடங்களிலுமிருந்து உங்களைச் சேர்த்து, நான் உங்களை விலக்கியிருந்த ஸ்தலத்துக்கே உங்களைத் திரும்பிவரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
15. கர்த்தர் எங்களுக்குப் பாபிலோனிலும் தீர்க்கதரிசிகளை எழுப்பினார் என்று சொல்லுகிறீர்கள்.
16. ஆனால், தாவீதின் சிங்காசனத்தில் உட்கார்ந்திருக்கிற ராஜாவைக் குறித்தும், உங்களோடேகூடச் சிறையிருப்பில் புறப்பட்டுப்போகாமல் இந்த நகரத்தில் குடியிருக்கிற உங்கள் சகோதரராகிய எல்லா ஜனங்களைக்குறித்தும்,
17. இதோ, நான் பட்டயத்தையும், பஞ்சத்தையும், கொள்ளைநோயையும் அவர்களுக்குள் அனுப்புவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; புசிக்கத்தகாத கெட்டுப்போன அத்திப்பழங்களுக்கு அவர்களை ஒப்பாக்குவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
18. அவர்கள் என் வார்த்தைகளைக் கேளாமற்போனபடியால், நான் அவர்களைப் பட்டயத்தாலும், பஞ்சத்தாலும் கொள்ளைநோயாலும் பின்தொடர்ந்து, அவர்களைப் பூமியிலுள்ள எல்லா ராஜ்யங்களிலும் அலைந்து திரிகிறவர்களாகவும், நான் அவர்களைத் துரத்துகிற எல்லா ஜாதிகளிடத்திலும் சாபமாகவும், பாழாகவும், ஈசலிடுதலுக்கிடமாகவும், நிந்தையாகவும் வைப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
19. நான் உங்களிடத்திற்குத் தீர்க்கதரிசிகளாகிய என் ஊழியக்காரரை ஏற்கனவே அனுப்பிக்கொண்டேயிருந்தும், நீங்கள் செவிகொடாமற்போனீர்களே என்று கர்த்தர் சொல்லுகிறார்.
20. இப்போதும் சிறையிருக்கும்படி நான் எருசலேமிலிருந்து பாபிலோனுக்கு அனுப்பிவிட்ட நீங்களெல்லாரும் கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.