19. பின்பு ஆசாரியன் அவளை ஆணையிடுவித்து: ஒருவனும் உன்னோடே சயனியாமலும், உன் புருஷனுக்கு உட்பட்டிருக்கிற நீ தீட்டுப்படத்தக்கதாய்ப் பிறர்முகம் பாராமலும் இருந்தால், சாபகாரணமான இந்தக் கசப்பான ஜலத்தின் தோஷத்துக்கு நீங்கலாயிருப்பாய்.
20. உன் புருஷனுக்கு உட்பட்டிருக்கிற நீ பிறர்முகம் பார்த்து, உன் புருஷனோடேயன்றி அந்நியனோடே சம்யோகமாய் சயனித்து தீட்டுப்பட்டிருப்பாயானால்.
21. கர்த்தர் உன் இடுப்பு சூம்பவும், உன் வயிறு வீங்கவும்பண்ணி, உன்னை உன் ஜனங்களுக்குள்ளே சாபமும் ஆணையிடுங்குறியுமாக வைப்பாராக.
22. சாபகாரணமான இந்த ஜலம் உன் வயிறு வீங்கவும் இடுப்பு சூம்பவும் பண்ணும்படி, உன் குடலுக்குள் பிரவேசிக்கக்கடவது என்கிற சாபவார்த்தையாலே ஸ்திரீயை ஆணையிடுவித்துச் சொல்வானாக. அதற்கு அந்த ஸ்திரீ: ஆமென், ஆமென், என்று சொல்லக்கடவள்.
23. பின்பு ஆசாரியன் இந்தச் சாபவார்த்தைகளை ஒரு சீட்டில் எழுதி, அவைகளைக் கசப்பான ஜலத்தினால் கழுவிப்போட்டு,
24. சாபகாரணமான அந்தக் கசப்பான ஜலத்தை அவள் குடிக்கும்படி பண்ணுவான்; அப்பொழுது சாபகாரணமான அந்த ஜலம் அவளுக்குள் இறங்கிக் கசப்பாகும்.
25. பின்பு ஆசாரியன் எரிச்சலின் காணிக்கையை அந்த ஸ்திரீயின் கையிலிருந்து வாங்கி, அதைக் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டி, பீடத்தின்மேல் செலுத்தி,
26. ஞாபகக்குறியாக அதிலே ஒரு கைப்பிடி நிறைய எடுத்து, பீடத்தின்மேல் தகனித்து, பின்பு ஸ்திரீக்கு அந்த ஜலத்தைக்குடிக்கும்படி கொடுக்கக்கடவன்.
27. அந்த ஜலத்தைக் குடிக்கச் செய்த பின்பு சம்பவிப்பதாவது: அவள் தீட்டுப்பட்டு, தன் புருஷனுக்குத் துரோகம்பண்ணியிருந்தால், சாபகாரணமான அந்த ஜலம் அவளுக்குள் பிரவேசித்துக் கசப்புண்டானதினால், அவள் வயிறு வீங்கி, அவள் இடுப்பு சூம்பும்; இப்படியே அந்த ஸ்திரீ தன் ஜனங்களுக்குள்ளே சாபமாக இருப்பாள்.
28. அந்த ஸ்திரீ தீட்டுப்படாமல் சுத்தமாயிருந்தால், அவள் அதற்கு நீங்கலாகி, கர்ப்பந்தரிக்கத்தக்கவளாயிருப்பாள்.
29. ஒரு ஸ்திரீ தன் புருஷனோடேயன்றி அந்நிய புருஷனோடே சேர்ந்து தீட்டுப்பட்டதினால் உண்டான எரிச்சலுக்கும்,
30. புருஷன்மேல் எரிச்சலின் ஆவி வருகிறதினால், அவன் தன் மனைவியின்மேல் அடைந்த சமுசயத்துக்கும் அடுத்த பிரமாணம் இதுவே. அவன் கர்த்தருடைய சந்நிதியில் தன் மனைவியை நிறுத்துவானாக; ஆசாரியன் இந்தப் பிரமாணத்தின்படியெல்லாம் அவளுக்குச் செய்யக்கடவன்.
31. புருஷனானவன் அக்கிரமத்திற்கு நீங்கலாயிருப்பான்; அப்படிப்பட்ட ஸ்திரீயோ, தன் அக்கிரமத்தைச் சுமப்பாள் என்று சொல் என்றார்.