3. ஆசரிப்புக் கூடாரத்திலே வேலைசெய்யும் சேனைக்கு உட்படத்தக்க முப்பது வயது முதல் ஐம்பது வயதுவரைக்குமுள்ள எல்லாரையும் எண்ணி, தொகையிடுவாயாக.
4. ஆசரிப்புக் கூடாரத்திலே கோகாத் புத்திரரின் பணிவிடை மகா பரிசுத்தமானவைகளுக்குரியது.
5. பாளயம் புறப்படும்போது, ஆரோனும் அவன் குமாரரும் வந்து, மறைவின் திரைச்சீலையை இறக்கி, அதினாலே சாட்சியின் பெட்டியை மூடி,
6. அதின்மேல் தகசுத்தோல் மூடியைப்போட்டு, அதின்மேல் முற்றிலும் நீலமானதுப்பட்டியை விரித்து, அதின் தண்டுகளைப் பாய்ச்சி,
7. சமுகத்தப்ப மேஜையின்மேல் நீலத்துப்பட்டியை விரித்து, தட்டுகளையும் தூபக்கரண்டிகளையும் கிண்ணங்களையும் மூடுகிற தட்டுகளையும் அதின்மேல் வைப்பார்களாக; நித்திய அப்பமும் அதின்மேல் இருக்கக்கடவது.
8. அவைகளின்மேல் அவர்கள் சிவப்புத்துப்பட்டியை விரித்து, அதைத் தகசுத்தோல் மூடியால் மூடி, அதின் தண்டுகளைப் பாய்ச்சி,
9. இளநீலத் துப்பட்டியை எடுத்து, குத்துவிளக்குத்தண்டையும், அதின் அகல்களையும், அதின் கத்தரிகளையும், சாம்பல் பாத்திரங்களையும், அதற்குரிய எண்ணெய்ப் பாத்திரங்களையும் மூடி,
10. அதையும் அதற்கடுத்த தட்டுமுட்டுகள் யாவையும் தகசுத்தோல் மூடிக்குள்ளே போட்டு, அதை ஒரு தண்டிலே கட்டி,
11. பொற்பீடத்தின்மேல் இளநீலத் துப்பட்டியை விரித்து, அதைத் தகசுத்தோல் மூடியால் மூடி, அதின் தண்டுகளைப் பாய்ச்சி,
12. பரிசுத்த ஸ்தலத்தில் வழங்கும் ஆராதனைக்கேற்ற சகல தட்டுமுட்டுகளையும் எடுத்து, இளநீலத் துப்பட்டியிலே போட்டு, தகசுத்தோல் மூடியினால் மூடி, தண்டின்மேல் கட்டி,
13. பலிபீடத்தைச் சாம்பலற விளக்கி, அதின்மேல் இரத்தாம்பரத் துப்பட்டியை விரித்து,
14. அதின்மேல் ஆராதனைக்கேற்ற சகல பணிமுட்டுகளாகிய கலசங்களையும், முள்துறடுகளையும், சாம்பல் எடுக்கும் கரண்டிகளையும், கலசங்களையும், பலிபீடத்திற்கடுத்த எல்லாப் பாத்திரங்களையும், அதின்மேல் வைத்து, அதின்மேல் தகசுத்தோல் மூடியை விரித்து, அதின் தண்டுகளைப் பாய்ச்சக்கடவர்கள்.
15. பாளயம் புறப்படும்போது, ஆரோனும் அவன் குமாரரும் பரிசுத்த ஸ்தலத்தையும் அதினுடைய சகல பணிமுட்டுகளையும் மூடித் தீர்ந்தபின்பு, கோகாத் புத்திரர் அதை எடுத்துக்கொண்டுபோகிறதற்கு வரக்கடவர்கள்; அவர்கள் சாகாதபடிக்கு பரிசுத்தமானதைத் தொடாதிருக்கக்கடவர்கள்; ஆசரிப்புக் கூடாரத்திலே கோகாத் புத்திரர் சுமக்கும் சுமை இதுவே.
16. ஆசாரியனாகிய ஆரோனின் குமாரன் எலெயாசார், விளக்குக்கு எண்ணெயையும், சுகந்த தூபவர்க்கத்தையும், தினந்தோறும் இடும் போஜனபலியையும், அபிஷேகதைலத்தையும், வாசஸ்தலம் முழுவதையும், அதிலுள்ள யாவையும், பரிசுத்த ஸ்தலத்தையும் அதின் பணிமுட்டுகளையும், விசாரிக்கக்கடவன் என்றார்.
17. கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:
18. லேவியருக்குள்ளே கோகாத் வம்சமாகிய கோத்திரத்தார் அழிந்துபோகாதபடி பாருங்கள்.
19. அவர்கள் மகா பரிசுத்தமானவைகளைக் கிட்டுகையில், சாகாமல் உயிரோடிருக்கும்படிக்கு, நீங்கள் அவர்களுக்காகச் செய்யவேண்டியதாவது:
20. ஆரோனும் அவன் குமாரரும் வந்து, அவர்களில் அவனவனை அவனவன் செய்யும் வேலைக்கும் அவனவன் சுமக்கும் சுமைக்கும் நியமிக்கக்கடவர்கள்; அவர்களோ சாகாதபடிக்குப் பரிசுத்தமானவைகள் மூடப்படும்போது பார்க்கிறதற்கு உட்பிரவேசியாமல் இருப்பார்களாக என்றார்.