38. மாடுகள் முப்பத்தாறாயிரம்; அவைகளில் கர்த்தருக்குப் பகுதியாக வந்தது எழுபத்திரண்டு.
39. கழுதைகள் முப்பதினாயிரத்து ஐந்நூறு; அவைகளில் கர்த்தருக்குப் பகுதியாக வந்தது அறுபத்தொன்று.
40. நரஜீவன்கள் பதினாறாயிரம்பேர்; அவர்களில் கர்த்தருக்குப் பகுதியாக வந்தவர்கள் முப்பத்திரண்டு பேர்.
41. கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் அந்தப் பகுதியை, மோசே கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே. ஆசாரியனாகிய எலெயாசாரிடத்தில் கொடுத்தான்.
42. யுத்தம்பண்ணின பேர்களுக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் மோசே பாதி பாதியாகப் பங்கிட்டதின்படியே சபையாருக்கு வந்த பாதிப்பங்காவது:
43. ஆடுகளில் மூன்றுலட்சத்து முப்பத்தேழாயிரத்து ஐந்நூறு,
44. மாடுகளில் முப்பத்தாறாயிரம்,
45. கழுதைகளில் முப்பதினாயிரத்து ஐந்நூறு,
46. நரஜீவன்களில் பதினாயிரம்பேருமே.
47. இஸ்ரவேல் புத்திரரின் பாதிப்பங்குக்கு வந்த இந்த நரஜீவன்களிலும் மிருகங்களிலும் மோசே ஐம்பதுக்கு ஒன்று வீதமாக, எடுத்து அவைகளைக் கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, கர்த்தருடைய வாசஸ்தலத்தின் காவலைக் காக்கிற லேவியருக்குக் கொடுத்தான்.
48. பின்பு ஆயிரம்பேருக்குத் தலைவரும் நூறுபேருக்குத் தலைவருமான சேனாபதிகள் மோசேயினிடத்தில் வந்து,
49. உமது ஊழியக்காரராகிய நாங்கள் எங்கள் கையின் கீழிருக்கிற யுத்தமனிதரைத் தொகை பார்த்தோம்; அவர்களுக்குள்ளே ஒரு ஆளும் குறையவில்லை.
50. ஆகையால், கர்த்தருடைய சந்நிதியில் எங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்பொருட்டு, எங்களுக்குக் கிடைத்த பொற்பணிகளாகிய பாதசரங்களையும், அஸ்தகடகங்களையும், மோதிரங்களையும், காதணிகளையும், காப்புகளையும் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தோம் என்றார்கள்.