எண்ணாகமம் 24:1-11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

1. இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்குப் பிரியம் என்று பிலேயாம் கண்டபோது, அவன் முந்திச் செய்து வந்ததுபோல நிமித்தம் பார்க்கப் போகாமல், வனாந்தரத்திற்கு நேராகத் தன் முகத்தைத் திருப்பி,

2. தன் கண்களை ஏறெடுத்து, இஸ்ரவேல் தன் கோத்திரங்களின்படியே பாளயமிறங்கியிருக்கிறதைப் பார்த்தான்; தேவஆவி அவன்மேல் வந்தது.

3. அப்பொழுது அவன் தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: பேயோரின் குமாரனாகிய பிலேயாம் சொல்லுகிறதாவது, கண் திறக்கப்பட்டவன் உரைக்கிறதாவது,

4. தேவன் அருளும் வார்த்தைகளைக் கேட்டு, சர்வவல்லவரின் தரிசனத்தைக் கண்டு தாழவிழும்போது, கண்திறக்கப்பட்டவன் விளம்புகிறதாவது,

5. யாக்கோபே, உன் கூடாரங்களும், இஸ்ரவேலே, உன் வாசஸ்தலங்களும் எவ்வளவு அழகானவைகள்!

6. அவைகள் பரவிப்போகிற ஆறுகளைப்போலவும், நதியோரத்திலுள்ள தோட்டங்களைப்போலவும், கர்த்தர் நாட்டின சந்தனமரங்களைப்போலவும், தண்ணீர் அருகே உள்ள கேதுரு விருட்சங்களைப்போலவும் இருக்கிறது.

7. அவர்களுடைய நீர்ச்சால்களிலிருந்து தண்ணீர் பாயும்; அவர்கள் வித்து திரளான தண்ணீர்களில் பரவும்; அவர்களுடைய ராஜா ஆகாகைப் பார்க்கிலும் உயருவான்; அவர்கள் ராஜ்யம் மேன்மையடையும்.

8. தேவன் அவர்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்; காண்டாமிருகத்துக்கொத்த பெலன் அவர்களுக்கு உண்டு; அவர்கள் தங்கள் சத்துருக்களாகிய ஜாதிகளைப் பட்சித்து, அவர்கள் எலும்புகளை நொறுக்கி, அவர்களைத் தங்கள் அம்புகளாலே எய்வார்கள்.

9. சிங்கம்போலவும் துஷ்ட சிங்கம்போலவும் மடங்கிப் படுத்துக்கொண்டிருக்கிறார்கள்; அவர்களை எழுப்புகிறவன் யார்? உங்களை ஆசீர்வதிக்கிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன், உங்களைச் சபிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்றான்.

10. அப்பொழுது பாலாக் பிலேயாமின்மேல் கோபம் மூண்டவனாகி, கையோடே கைதட்டி, பிலேயாமை நோக்கி: என் சத்துருக்களைச் சபிக்க உன்னை அழைத்தனுப்பினேன்; நீயோ இந்த மூன்றுமுறையும் அவர்களை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்தாய்.

11. ஆகையால் உன் இடத்துக்கு ஓடிப்போ; உன்னை மிகவும் கனம்பண்ணுவேன் என்றேன்; நீ கனமடையாதபடிக்குக் கர்த்தர் தடுத்தார் என்றான்.

எண்ணாகமம் 24