17. உம்மை மிகவும் கனம்பண்ணுவேன்; நீர் சொல்வதையெல்லாம் செய்வேன்; நீர் வந்து எனக்காக அந்த ஜனங்களைச் சபிக்கவேண்டும் என்று சொல்லச்சொன்னார் என்றார்கள்.
18. பிலேயாம் பாலாகின் ஊழியக்காரருக்குப் பிரதியுத்தரமாக: பாலாக் எனக்குத் தன் வீடு நிறைய வெள்ளியும் பொன்னும் தந்தாலும், சிறிய காரியமானாலும் பெரிய காரியமானாலும் செய்யும் பொருட்டு, என் தேவனாகிய கர்த்தரின் கட்டளையை நான் மீறக்கூடாது.
19. ஆகிலும், கர்த்தர் இனிமேல் எனக்கு என்ன சொல்லுவார் என்பதை நான் அறியும்படிக்கு, நீங்களும் இந்த இராத்திரி இங்கே தங்கியிருங்கள் என்றான்.
20. இரவிலே தேவன் பிலேயாமிடத்தில் வந்து; அந்த மனிதர் உன்னைக் கூப்பிட வந்திருந்தால், நீ எழுந்து அவர்களோடே கூடப்போ; ஆனாலும், நான் உனக்குச் சொல்லும் வார்த்தையின்படிமாத்திரம் நீ செய்யவேண்டும் என்றார்.
21. பிலேயாம் காலமே எழுந்து, தன் கழுதையின்மேல் சேணங்கட்டி மோவாபின் பிரபுக்களோடே கூடப் போனான்.
22. அவன் போகிறதினாலே தேவனுக்குக் கோபம் மூண்டது; கர்த்தருடைய தூதனானவர் வழியிலே அவனுக்கு எதிராளியாக நின்றார். அவன் தன் கழுதையின்மேல் ஏறிப்போனான்; அவன் வேலைக்காரர் இரண்டுபேரும் அவனோடே இருந்தார்கள்.
23. கர்த்தருடைய தூதனானவர் உருவின பட்டயத்தைத் தம்முடைய கையிலே பிடித்துக்கொண்டு வழியிலே நிற்கிறதைக் கழுதை கண்டு, வழியை விட்டு வயலிலே விலகிப்போயிற்று; கழுதையை வழியில் திருப்ப பிலேயாம் அதை அடித்தான்.
24. கர்த்தருடைய தூதனானவர் இருபுறத்திலும் சுவர் வைத்திருந்த திராட்சத் தோட்டங்களின் பாதையிலே போய் நின்றார்.
25. கழுதை கர்த்தருடைய தூதனைக்கண்டு, சுவர் ஒரமாய் ஒதுங்கி, பிலேயாமின் காலைச் சுவரோடே நெருக்கிற்று; திரும்பவும் அதை அடித்தான்.
26. அப்பொழுது கர்த்தருடைய தூதன் அப்புறம் போய், வலதுபுறம் இடதுபுறம் விலக வழியில்லாத இடுக்கமான இடத்திலே நின்றார்.
27. கழுதை கர்த்தருடைய தூதனைக்கண்டு, பிலேயாமின் கீழ்ப் படுத்துக்கொண்டது; பிலேயாம் கோபம் மூண்டவனாகி, கழுதையைத் தடியினால் அடித்தான்.