16. பின்பு மோசே கோராகை நோக்கி: நீயும் உன் கூட்டத்தார் யாவரும் நாளைக்குக் கர்த்தருடைய சந்நிதியில் வாருங்கள்; நீயும் அவர்களும் ஆரோனும் வந்திருங்கள்.
17. உங்களில் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் தூபகலசங்களை எடுத்து, அவைகளில் தூபவர்க்கத்தைப் போட்டு, தங்கள் தங்கள் தூபகலசங்களாகிய இருநூற்று ஐம்பது தூபகலசங்களையும் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவரவேண்டும்; நீயும் ஆரோனும் தன் தன் தூபகலசத்தைக் கொண்டுவாருங்கள் என்றான்.
18. அப்படியே அவரவர் தங்கள் தங்கள் தூபகலசங்களை எடுத்து, அவைகளில் அக்கினியையும் தூபவர்க்கத்தையும் போட்டு, ஆசரிப்புக் கூடாரவாசலுக்கு முன்பாக வந்து நின்றார்கள்; மோசேயும் ஆரோனும் அங்கே நின்றார்கள்.
19. அவர்களுக்கு விரோதமாகக் கோராகு சபையையெல்லாம் ஆசரிப்புக் கூடாரவாசலுக்கு முன்பாகக் கூடிவரும்படி செய்தான்; அப்பொழுது கர்த்தருடைய மகிமை சபைக்கெல்லாம் காணப்பட்டது.
20. கர்த்தர் மோசேயோடும் ஆரோனோடும் பேசி:
21. இந்தச் சபையை விட்டுப் பிரிந்து போங்கள்; ஒரு நிமிஷத்திலே அவர்களை அதமாக்குவேன் என்றார்.
22. அப்பொழுது அவர்கள் முகங்குப்புற விழுந்து: தேவனே, மாம்சமான யாவருடைய ஆவிகளுக்கும் தேவனே, ஒரு மனிதன் பாவம் செய்திருக்கச் சபையார் எல்லார்மேலும் கடுங்கோபங்கொள்வீரோ என்றார்கள்.
23. அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி:
24. கோராகு தாத்தான் அபிராம் என்பவர்களுடைய வாசஸ்தலத்தை விட்டு விலகிப்போங்கள் என்று சபையாருக்குச் சொல் என்றார்.
25. உடனே மோசே எழுந்திருந்து, தாத்தான் அபிராம் என்பவர்களிடத்தில் போனான்; இஸ்ரவேலின் மூப்பரும் அவனைப் பின்சென்று போனார்கள்.
26. அவன் சபையாரை நோக்கி: இந்தத் துஷ்டமனிதரின் சகல பாவங்களிலும் நீங்கள் வாரிக்கொள்ளப்படாதபடிக்கு, அவர்கள் கூடாரங்களை விட்டு விலகி, அவர்களுக்கு உண்டானவைகளில் ஒன்றையும் தொடாதிருங்கள் என்றான்.